Saturday, September 4, 2010

29 : கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு ....................................01

பிறர்தன்னை இகழாது வாழ வேண்டும் என்று எண்ணுபவன் மற்றவர் பொருளை வஞ்சித்துக் கொள்ளும் மனம் இல்லாதவனாய் இருக்க வேண்டும். வஞ்சனை என்றும் இழிவையே தரும்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் .......................................02

அடுத்தவன் பொருளை அவன் அறியாமல் கவர்ந்து கொள்வோம் என மனத்தால் நினைத்தாலும் அது தீதே. நினைவு செயலுக்கு இடமாகும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவறிந்(து)
ஆவது போலக் கெடும் ...............................................03

திருடிப் பெறுகின்ற செல்வம், பெருகுவது போல் தோன்றி, இருப்பதையும் அழித்துச் சென்று விடும். அழிவிற்கு வழி கோலுதல் ஆக்கமன்று.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் ....................................................04

திருடிப் பொருள் பெற விரும்பும் பேராசை முடிவில் தீர்க்க முடியாத பெரும் துன்பத்தைத் தந்து விடும். துயரம் தரும் களவை விரும்பவே கூடாது.

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதி
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் ...............................05

பிறன் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வஞ்ச மனத்தாரிடம் அன்பும் அருளும் நிறைந்த செயலைக் காண முடியாது. வஞ்சிப்பாரிடம் வளமான மனமேது ?

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர் ......................................................06

மாற்றான் பொருளைத் திருடி வாழும் ஆசை மனமுடையாரிடம் நல்வழியில் செல்லும்
நல்ல மனத்தைக் காண முடியாது.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் .........................................07

வாழும் முறை அறிந்து வாழ்பவனிடத்தே பிறன்பொருளை வஞ்சித்து வாழும் இருள் மனம் நிற்காது. இருளும் ஒளியும் ஒரு நேரத்தே தோன்றாது. ஒன்றிருப்பின் மற்றொன்று நிலைக்காது.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு .....................................08

வாழும் முறையறிந்து வாழ்பவன் நெஞ்சத்தே அறம் நிலைப்பதைப் போல் களவறிந்தவன் நெஞ்சில் வஞ்சம் குடியிருக்கும்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர் ...............................................09

களவைத் தவிர பிறவற்றைத் தேர்ந்து அறியாதவர்கள் அறமில்லா செயல்களைச் செய்து அழிவர். புகழின்றி வாழ்வர்.

கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு ...........................................10

திருடிப் பிழைப்பவர்க்கு வாழ்வின் பயன் நிலைக்காது. நல்வழி நடப்பார்க்கு வானுலகம் கிடைக்காமல் போகாது.

செல்வி ஷங்கர்

2 comments:

')) said...

சோதனை மறுமொழி

Anonymous said...

நல்லதொரு பணி - எளிமையான விளக்கங்கள் - தொடர்க