Saturday, January 29, 2011

30 : வாய்மை

01 : வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எவ்வுயிர்க்கும் தீங்கு தராத சொற்களைப் பேசுவதே ஆகும்.

02 : பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

குற்றமற்ற நன்மை தரும் என்றால் பொய் கூட வாய்மையே ஆகும்.

03 : தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

உள்ளம் அறிய பொய் கூறாதே ! கூறினால் உன்னெஞ்சே உன்னைச் சுட்டெரித்து விடும்.

04 : உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

மனமறிய பொய் கூறாது வாழ்பவன் உலகத்தவரின் உள்ளங்களில் எல்லாம் வீற்றிருப்பான்.

05 : மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ் செய்வாரின் தலை.

மனமறிய உண்மை பேசி வாழ்பவன் தானமும் தவமும் செய்யும் மக்களைக் காட்டிலும் சிறந்தவன். தனக்காகச் செய்கின்ற தானமும் பிறர்க்காகச் செய்கின்ற தவமும் கூட உண்மை பேசுபவன் முன் பொய்த்துப் போகும். உலகில் உண்மையே உயர்ந்த அறம்.

06 : பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொய் கூறாதிருத்தலை விடச் சிறந்த புகழ் வேறு இல்லை. வருந்திப் பாடுபடாமலே எல்லாப் புகழையும் தருவது உண்மை ஒன்றே !

07 : பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய் சொல்லாமல் நடக்கும் புனிதச் செயல் ஒன்றை நீ மேற்கொண்டாலே போதும். பிற புண்ணியச் செயல்கள் எல்லாம் நீ செய்யாமலே உனக்கு வந்து சேரும்.

08 : புறந்தூய்மை நீரான மையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

உடல் தூய்மை நீ நாள் தோறும் நீராடுவதால் அமையும். அது போல் உன் உள்ளத் தூய்மை நீ நாள் தோறும் உண்மை பேசுவதால் அமையும்.

09 : எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு.

புற இருளைப் போக்குகின்ற விளக்குகள் எல்லாம் சான்றோர்க்கு விளக்காக மாட்டா ! மன இருளைப் போக்குகின்ற பொய்யாமை ஆகிய விளக்கே ஒளி தரும் விளக்காகும்.

10 : யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

உண்மையாகவே இந்த உலகத்தில் நான் ஆராய்ந்து அறிந்த வற்றுள் உண்மையை விடச் சிறந்த நல்லறம் வேறொன்றுமில்லை.

செல்வி ஷங்கர்