Thursday, April 10, 2008

இரண்டு மனம் !

தவத்திற்கு ஒருவர்
தமிழுக்கு இருவர்
இதை நினைக்கும் போதெல்லாம்
தனியாய்ப் பேசினால் ! எப்படி இருக்கும்
என்ற எண்ணம் தான் அடிக்கடி தோன்றும்.
சொல்லாத சொல்லும் சொல்லிவிட்ட சொல்லும்
அர்த்தமற்றது தான் - புரிந்து கொள்ளாத வரையில்
என்ற எண்ணச்சிறகும் பறக்கும் !

இரண்டாயிருப்பதில் இன்பம் உண்டு !
தனிமை நம் தனித் தன்மையைக் கொன்று விடும்.
பதவியில் இரண்டு ! பணியில் இரண்டு !
வாழ்க்கையும் இரண்டு ! வாழ்க்கை மலர்கள் இரண்டு !
அவை இரண்டு பாடங்களைச் சொல்லித் தந்தன.
ஒன்றாய் இருப்பது ( ஒற்றுமை) இன்பம் !
ஒளியின் சேர்க்கை இரண்டு தானே !
இல்லை எனில் காயேது கனியேது ?
கண்ணின் மணிகள் இரண்டு தான் !
மணியின் கண்களும் இரண்டு தான் !
அவை மனத்தில் மணக்கும் மயக்கம் !
ஒன்றென்ற உணர்வு ( தனிமை ) ஓடிப்போகும் !
நெஞ்சம் உவப்பாய் இருக்கும் !
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
தொட்டுப் பார்க்கும் தொட்டில் குழந்தை போல்
துவண்டு போகும் மனம் !!!
துள்ளித் திரியும் மனம். !!!!

---------------------------------------

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

இரண்டடியில் இன்பம் !

இன்பத்தைத் துன்பத்தை
ஏற்றத்தை இறக்கத்தை
உயர்வைத் தாழ்வை
உணர்வை உரிமையை
அன்பை அருளை
அடக்கத்தை ஒழுக்கத்தை
கல்வியை கல்லாமையை
செயலை பயனை
செப்படி வித்தையாய்
செதுக்கிய சிற்பி !!!

மனைவியை மக்களை
வாழ்வை இன்பத்தை
மனத்தை மகிழ்வை
நட்பை சுற்றத்தை
முயற்சியை வெற்றியை
அரசனை அமைச்சனை
பகையை படையை
நாட்டை மக்களை
உழவனை உணவை
உணர்த்திய வேந்தன் !!!

காலத்தை இடத்தை
செயலை வலிமையை
ஊக்கத்தை ஆக்கத்தை
உள்ளத்தை உணர்ச்சியை
பொன்னைப் பொருளை
செய்யும் முறையை
புவியைப் புகழை
புனிதமாய்க் காட்டிய
மனித தெய்வம் !!

இரண்டே அடியில்
உலகை அளந்த
உயர் பண்பாளன் !!
இரண்டாய்க் கண்ட
உலகில் இறையை
மட்டும் ஒன்றாய்க்
கண்ட உத்தமன் !!

இவனே எந்தன்
இசைத்தமிழ் வேந்தன் !!
இரண்டாம் தமிழின்
இலக்கணம் தந்த
இயற்றமிழ் புலவன் !!
மூன்றாம் தமிழாய்
வாழ்வைக் காட்டிய
முனிவன் !! தமிழ்மறை
தந்த தத்துவன் !!!
-----------------------------------
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

செல்வி ஷங்கர்

9 : விருந்தோம்பல்

01. பொருளீட்டி நாம் மனைவி மக்களுடன் மகிழ்வாய் வாழ்வதெல்லாம் நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று உதவி செய்வதற்கே ! வாழ்க்கை விருந்தில் மகிழும்.

02. நாம் விருந்தினரை வெளியே நிறுத்தி விட்டு தனித்து உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கதன்று. விருந்தை விடுத்து நாம் மட்டும் உண்பது விடமே ஆகும்.

03. நாளும் வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்புடன் உண்பித்து உதவி செய்பவன் வாழ்க்கையில் வறுமை என்பதே இல்லை. இல்லாமை கூட அவன் செயலில் இனிமையாகி விடும்.

04. அகமும் முகமும் மலர விருந்து போற்றுபவன் இல்லத்தில் செல்வத் திருமகள் மனம் மகிழ்ந்து வீற்றிருப்பாள். செல்வச் செழிப்பு செயலாய் வெளிப்படும்.

05. விருந்தினரை வரவேற்று உணவளித்து அன்பு வாழ்க்கை நடத்துபவன் நிலத்துக்கு விதை விதைக்காமலே பயிர் விளையும். அன்பை விதைத்தால் அகிலம் வாழும்.

06. தன் வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்று வழி அனுப்பி, இனி வரும் விருந்தினரை எதிர் நோக்கிக் காத்திருக்கும் மனம் படைத்தவன் வானுலகத் தேவர்கள் வரவேற்கும் விருந்தாவான்.

07. விருந்தோம்பலின் பயன் இத்தகையது என்று அளவிட முடியாது. அது ஓர் தவம். அத்தவத்தின் அளவு நாம் வரவேற்கும் விருந்தின் தனமையைப் பொறுத்தது. அன்பும் இன்சொல்லும் விருந்தை இனிமையாக்கும். நம் மனத்தை மென்மையாக்கும்.

08. பொருட்பயனை அடைய விரும்புவோர் விருந்தினைப் போற்றுவர். அவ்வாறு விருந்து போற்றாதவர்கள் வருந்திப் பொருள் சேர்த்தும் பயனில்லை. செல்வத்துப் பயனே ஈதல்.

09. விருந்து போற்றுதலே அறம். இதனை அறியாதார் அறியாதாரே ! பெருஞ் செல்வராயினும் விருந்து போற்றாதவர் வறியவரே ! செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.

10. விருந்தினர் மிக மென்மையானவர்கள். அவர்களை இனிமையாய் நோக்க வேண்டும். அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தால் வாடும். ஆனால் விருந்தினரோ முகம் மாறுபட்டு நோக்கினாலே மனம் வாடி விடுவர். மலரினும் மெல்லிது அன்பு மனம்.

தொடரும் .....






05

Sunday, April 6, 2008

சாய்தளம்

ஓடி வந்த காவியா நின்று பார்த்தாள். பூங்காவின் நாற்புறமும் குழந்தைகள். அவளும் கைப்பொருளை வீசி விட்டு, தலையை அசைத்த படி ஊஞ்சலின் அருகே சென்றாள். அங்கே இடமில்லை. அவளின் குட்டிக் கைப்பை புல் வெளியில் கிடந்தது. ஏமாற்றமாய் இருந்தது.

சாய்தளத்தின் ( சீசா ) அருகில் வந்தாள். ஒரு புறம் ஏறி அமர்ந்தாள். அதன் மறு புறம் உயர்ந்தே நின்றது. ஆடுவதற்கு யாருமில்லை. வாடிய கண்களோடு அங்குமிங்கும் பார்த்தாள்.

சறுக்கு மரத்தில் எல்லாக்குழந்தைகளும் வரிசை வரிசையாய் ஏறி இறங்கி சறுக்கிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இட நெருக்கடி. இங்கோ இருவர் விளையாடும் சாய்தளம் இறங்கியே கிடந்தது. ஏனோ ஏக்கமாய்ப் பார்த்தாள் அதனை! மேலும் கீழுமாய் ஏறி இறங்கும் சாய்தளத்தில் தான் ஒருத்தியாய் அமர்ந்து கொண்டு என் செய்வது ?

காவியாவை அழைத்து வந்த பாட்டி அங்கே பூங்காவின் கல்மேடையில் அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் காவியாவை நோக்கின.மெதுவாய் எழுந்து நடந்து வந்து சாய்தளத்தின் மறு புறத்தை தன் கைகளால் அமர்த்தி விட்டாள். காவியா மேலே பறந்தாள்! கண்களெல்லாம் சிரிப்பு! அவளும் பாட்டியும் பூங்காவில் சாய்தளமாடி தங்களை மறந்தனர்.

ஆனாலும் அவள் மனம் ஊஞ்சலையும் சறுக்கு மரத்தையுமே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. மூன்று வயதுக் காவியாவிற்கு ஒன்றும் புரிய வில்லை! பூங்காவைச் சுற்றி ஓடின குழந்தைகள். ஆடும் ஊஞ்சலிலோ அணிவரிசைக் காத்திருப்பு. சறுக்குமரத்திலோ தள்ளி அடித்து ஓடும் கூட்ட நெரிசல். சாய்தளத்தில் ஏன் ஒருவரையும் காணோம்? இருவர் இருந்தாலே இன்பமாய் ஆடலாமே! ஒன்றும் புரியாமல் ஓடினாள் பாட்டியிடம். ஆடிக்கொண்டே! பூங்கா அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது ! ஏன் ?
-------------------------------------------------------------------------------------------

8 : அன்புடைமை

01 : அன்பிற்கு பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் இல்லை. அன்புடையாரின் துன்பம் கண்ட இடத்து நம்மை அறியாமல் நம் கண்கள் கசிந்து சிந்தும் கண்ணீர்த் துளிகளே நம் அன்பை வெளிப்படுத்தி விடும்.

02 : அன்பில்லாதவர்கள் அனைத்துப் பொருள்களின் மீதும் ஆசை கொண்டு எல்லாம் தம்முடையதென்பர். ஆனால் அன்புடையாரோ தம் பொருள் மட்டுமல்ல தம் உடம்பும் கூட பிறர்க்கு உதவுதற்கே என்பர்.

03 : அன்புடன் வாழ்கின்ற வாழ்க்கை தான் நாம் உயிரோடு வாழ்கின்றோம் என்பதற்குப் பொருள். அன்பின்றி உடலும் உயிரும் பெற்று இயங்கும் வாழ்க்கை அத்துனை சிறப்புடையதன்று.

04: அன்பு பிறரிடம் ஆர்வத்தைத் தூண்டும். அந்த ஆர்வம் அவரிடம் நமக்கு நட்பைத் தரும். அந்த நட்புச் செல்வம் எவராலும் எளிதாக அடைய முடியாத செல்வம்.

05: அன்புடையாராய் வாழ்வது தான் வாழ்க்கையின் பயன். அந்த அன்பு நமக்கு வாழ்வின் இன்பத்தைத் தந்து விடும். அறத்தின் பயனே அன்பு செலுத்துதல் தான்.

06: அறியாதவர்கள் நன்மைக்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று எண்ணுவர். ஆனால் நம் பகையையும் நமக்கு வரும் தீமையையும் கூட நாம் அன்பால் வென்று விடலாம்.

07: எலும்பில்லாத உயிர்களை வெயில் சுட்டெரிப்பது போல வாழ்வில் அன்பில்லாதவர்களை அறநெறி துன்புறுத்தும்.

08: உள்ளன்பு இல்லாத வாழ்க்கை பாலைவனத்தில் பட்ட மரம் துளிர்ப்பதைப் போன்றது. ஒரு நாளும் பட்ட மரம் அதுவும் பாலைவனத்தில் செழிப்பதில்லை. அது போன்று தான் அன்பில்லா வாழ்க்கையும் வளம் தராது.

09: உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புற உறுப்புகள் எல்லாம் இருந்தும் பலனில்லை. அன்பு ஒன்றே நம்மை இயக்கும் உயிர் போன்றது.

10: அன்பில்லாத வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை. அன்போடு வாழ்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன். அத்தகைய அன்பு உள்ளத்தில் இல்லாதவன் இயக்கம் வெறும் எலும்பும் தோலும் போர்த்திய உடம்பின் இயக்கமே ஆகும்.

தொடரும் .....

Friday, April 4, 2008

ஈரத்தோடு இணைந்திடுவோம் !!

குடிக்கத் தண்ணீர் !
கண்ணீர்தான் வருகிறது !
ஒற்றுமை ! ஒற்றுமை !
என்ற உணர்வே
வற்றி விட்டதா ?

உலகம் எப்படியோ
எல்லாம் விரிந்து
விரைவாகி விட்டது !
இருந்தும் நம்மனம்
சுருங்கி விட்டதே !

ஒன்றாய் இருந்தால்
கூடப் பங்கு !
அதிலும் எட்டில்
ஒன்று ! இதைத்
தரமனம் இல்லையே !

மக்களைத் தூண்டுவது
அரசியல் தானே !
காலமே ! காலத்தின்
மக்களே ! ஒன்று
பட்டு நினையுங்கள் !

மக்களே ! இயற்கையை
துண்டா டாதீர்கள்!
நீதிக்குத் தலை
வணங்கி நீரினைப்
பகிர்ந்து கொள்வோம் !

நீரில் குலமில்லையே !
கொதிப்படைவதற்கு !
நிறம் இல்லையே !
வெறுப்படைவதற்கு !
ஈரத்தோடு இணைந்திடுவோம் !


Wednesday, April 2, 2008

சாதனை - ஒரு கண்ணோட்டம் !

கைப்பையை வைத்துவிட்டு களைப்பாய்ப் பார்க்கும் சங்கரன் ஒரு நாளும் தன் உணர்வை வெளிக் காட்டியதில்லை.

எப்போதும் சிந்தனை தான். சிரித்து மகிழ்வதற்கும் சில நேரங்கள் உண்டு என்பதை மறந்து போன முகம் அவனுடையது !

எப்பொழுதும் எங்காவது எதற்காவது ஓட்டிய சிந்தனையுடன் செயல்படுவது தான் அவன் வழக்கம் !!

ஆண்டுகள் ஐம்பதைக் கடந்தாலும் அதே இயக்கம் தான் அவனுடையது. அவன் எப்போது மனம் விட்டுச் சிரிப்பான் என்பது எவர்க்கும் தெரியவே தெரியாது.

அவனுக்குச் சீற்றம் வராமல் பார்த்துக்கொள்வது தான் மற்றவர் வேலை. இது எழுதாத விதி. விடை ஏக்கம் தான் பெருமூச்சு !

நாளாக நாளாக ஒன்று நன்றாய்ப் புரிந்தது. ஒன்றா இரண்டா ? ஓராயிரம் ! ஒன்று ஓய்ந்தால் மற்றொன்று தொடரும். இத்தனைக்கும் குருவிக்கூடு தான் அவன் வீடு .........

ஆனால் உண்ணவும் உறங்கவும் ஓய்வாக இருக்கவும் விடாத உறவுகள். ஒன்று ஓய்ந்தால் மற்றொன்று தலை தூக்கும் ! அது மூத்தவன் என்ற முன்னுரிமையால்!!

இதிலெல்லாம் விடுபட்டு எப்படிச் செயல் படுவது என்ற எண்ணம் தான் அவன் ஓட்டம். எப்படியோ உழைத்துப் பிழைத்துக் கொண்டிருந்தான் இம்சை செய்யும் உறவுகளுக்கிடையே.

வானில் ஒரு சூரியனும் உண்டல்லவா? கார்மேகங்களுக்கிடையே! வாடிய காலங்களெல்லாம் போய் வளம் காணும் காலமும் வந்தது. கண்மணிகள் வளர்ந்தன. வாழ்வில் ஒளி கூட்டின ! மலர்ச்சிப் பார்வையால்!

கண்மலர்கள் படிப்படியாய் வளர்ந்தன. ஆம் - படித்தே வளர்ந்தன. உழைத்து உழைத்து ஓய்வின்றிச் செல்லும் தந்தையை நோக்கின. செயலாற்றும் கரங்கள் செழுமை பெற்றன. தன்னம்பிக்கையால் தலை நிமிர்ந்தான்.

சூரிய ஒளியைக் கண்டு தலை சாய்க்கும் சன்னல் பூக்களாய் பெற்றோர் மனங்கள் மகிழ்ந்தன மக்களின் செயல்பாட்டில்!

காலத்தில் முடித்து விட்ட கடமைகள் கண் சிமிட்டின அவன் முன்னே. கனிவாய் இருந்தது அவன் மனம். கண்கள் சிரித்தன. உதடுகள் புன்னகைத்தன.

ஒழுங்காய் முடித்த கடமையில் உவக்கும் உள்ளம் போல் எட்டிப்பார்த்தது இளமை. ஆம். முதுமையில் இளமை. இது என்ன முரண்பாடு. சில நேரங்களில் முரண்பாடுகள் சுவை கூட்டும் அல்லவா ? அப்படி ஓர் சுவை.

தனித்து விடப்பட்ட உள்ளம் அடிக்கடி நினைப்பது இதனைத்தான். சாதனை என்பது தன்னைச் சரியாய் நடத்துவதும் தானே !!!!
------------------------------------------------------------------------------------------------