Thursday, January 24, 2008

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் ........அறம்

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் !
---அறம்---
............................................................

நாடாக இருந்தால் என்ன ?
காடாக இருந்தால் என்ன ?
எங்கே நல்லவர்கள் இருக்கிறார்களோ
அங்கே நிலமும் நன்றாக இருக்கும் !
நிலம் கெடுவது மக்களால் தான் !
மேடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும்
நிலத்தின் இயல்பு கெடுவதில்லை.
அதன் மீது நடமாடுகின்ற மக்களே
மண்ணைக் கெடுக்கின்றார்கள்.

எல்லார்க்கும் நம்மால் இயன்ற நல்லவற்றைச் செய்தால் நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்? செய்கின்றோம் என்ற பெருமித உணர்வே நமக்கு மேன்மையைத் தருமே! எல்லாரும் எல்லார்க்கும் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. ஒரு சிலரால் தான் அது முடியும்.
இதை உணராத நாம் செய்பவரையும் குறை கூறுகிறோம்.

விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விட மாட்டோம். பழிக்குப் பழி
வாங்கினால் நிகராகத்தான் இருப்போம். மன்னித்தால் உயர்வடைவோம். செயல் ஒன்றுதான்! அதன் முயற்சியும் ஒன்று தான்! நம் மனந்தான் அதை ஏற்க மறுக்கின்றது. மிகச் சிறந்த அறம் நம்மாலியன்ற நல்லவற்றை நாம் செய்வது தான். இல்லாவிட்டால் தீமையாவது செய்யாமலிருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் தீமை நன்மையைத் தராது. தீமையை நன்மையால் வெல்லுவது தான் சிறப்பு. மனமும் நம் சுற்றுப்புறமும் கெடாமலிருக்க வேண்டுமென்றால் நாம் நல்ல சிந்தனை உடையவராக இருப்போம். அதுவே நம்மை உயர்த்தும்.

Thursday, January 3, 2008

என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குபரே - புறம்

நட்பு உலகில் நனிசிறந்தது. ஏற்றத்தாழ்வு பாராதது. எல்லோரும் எல்லோரிடத்திலும் நட்புக் கொண்டு விடுவதில்லை. மழலை கூட தன்னைக் கனிவாய் பார்ப்பவரைத்தான் பார்த்துச் சிரிக்கும். அன்பு காட்டப்படும் பொழுது தான் சுவைக்கும்.

அன்று அரசன் புலவரிடம் நட்புக் கொண்டான். காரணம் நல்ல சிந்தனை! ஆற்றலும் வலிமையும் ஆதிக்கமும் உடைய அரசன் கவிஞனிடம் கனிவும் கருணையும் உடைய அன்பைச் செலுத்தினான். மாற்றார்க்கு மாறுபடும் சூரியனாய் உள்ள மன்னன், புலவர்க்கு குளிரூட்டும் தண்ணிலவாய் ஒளி வீசினான்.


வேல் தாங்கும் மார்பினை உடைய மாவீரன், தன் நெஞ்சைத் திறந்தால் மாண்புடை அன்பினை வெளிப்படுத்தினான். அதனால்தான் வறுமையிலும் செம்மையுடை புலவன் 'என் நெஞ்சம் திறப்போர் அங்கே உன்னைக் காண்பர்' என்றான் .


நாடோ மக்களோ நட்புடையவராய்த் திகழ்ந்தால் இந்த நன்னிலமே நம்முடையதுதான். அங்கே வேற்றுமை இல்லை! ஒற்றுமை ஒளி வீசும்! உலகம் உவகையால் ஒன்றுபடும்!