Monday, October 5, 2009

27 :தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு ...........................................01

தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதுமே தவம் எனப்படும்.

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது .................................02

நல்லவராக இருப்பதும் நல்லொழுக்கம் மேற்கொள்வதும் தவமுடையார்க்கு அழகாகும். அஃதில்லாதவர் அவ்வாறு நடிப்பது தவறே ஆகும்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்........................................03

தவம் செய்வார்க்கு தானம் செய்ய வேண்டியே மற்றவர்கள் தவம் மேற்கொள்வதில்லை.

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் ..............................04

துன்பம் செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் அன்பு செய்தாரைப் போற்றுதலும் தவத்தால் வரும் பண்பு

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.........................................05

நினைத்ததை நினைத்தவாறு பெறவே தவச் செயல் எல்லோராலும் மேற்கொள்ளப் படுகிறது. இடை விடா முயற்சியே தவம்

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு ....................06

தவம் மேற்கொள்பவர்களே தம் கடமையைச் செய்பவர்கள். மற்றவர்களெல்லாம் ஆசையால் பயனற்ற செயல்களைச் செய்பவர்களே ஆவர்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு...........................07

பொன்னைச் சுடச்சுட தரம் உயர்ந்து ஒளி வீசுவது போல் தவமேற்கொள்வார்
தன் துன்பம் நீங்கி அறிவொளி வீசுவர்.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மண்ணுயிர் எல்லாம் தொழும்.....................08

தன்னலப் பற்றற்றவனை தன்னுயிரும் பிறர்க்கே என்று எண்ணு பவனை எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு......................09

தவம் மேம்பட்ட ஒழுக்கம் உடையாரை எமனும்நெருங்க முடியாது. தன்னுயிரும் பிறர்க்கே என்ற விடாமுயற்சி உடையானிடம் உயிர் கொல்லும் எமனுக்கு ஒரு வேலையும் இல்லை.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்..............................10

உலகில் வறியவர் பலராக இருப்பதற்குக் காரணம் தவ உணர்வுடையார் சிலராகவும் அவ்வுணர்வற்றார் பலராகவும் இருப்பதுவே . விடா முயற்சிஉடைய செயல்களே வெற்றியைத் தேடித் தரும்.

செல்வி ஷங்கர்