Thursday, February 28, 2008

3 : நீத்தார் பெருமை !

1. இவ்வுலகத்து ஆசைகளைத் துறந்த துறவியரின் பெருமை அவர்தம் ஒழுக்க நெறிகளே ஆகும். அவை வேதங்கள் விதித்த செயல்களால் சிறப்பன. வாழ்வே வேதமானால் வழி தடுமாற வேண்டாமே !

2. இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எப்படிக் கணக்கிட முடியாதோ அது போன்றே துறவியரின் பெருமையையும் அளவிட்டுக் கூற முடியாது. அனைத்தையும் கடந்தார் கடவுளல்லவா !

3. உலக வாழ்வின் நன்மை தீமை உணர்ந்து துறவறம் பூண்டாரின் பெருமையே உலகில் சிறந்ததாகும். துன்பங்களைத் துறத்தல் இன்பம் தானே!

4. தன் மன மனவலிமையால் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள்பவன் இவ்வுலக வாழ்வில் அமைதி காண்பது போல் வீடு பேற்றுக்கும் வித்திடுவான். விதை முளைத்து வளர்தல் போல் இன்பம் பெருகும்.

5. ஐம்புலன்களின் ஆசையை அடக்கியவன் ஆற்றல் இறைவனைக் கூட ஏன் என்று கேட்கும் வலிமையைத் தந்து விடும். ஒழுக்க நெறி பின்பற்றி வாழ்தலால் சிறக்கும். சிறந்தார் என்றும் உயர்ந்தோரே!

6. பிறர் செய்வதற்கரிய செயல்களைத் தம்மாற்றலால் செய்து முடிப்போர் பெரியோர். அவ்வாறு செய்ய இயலாதார் சிறியோர். பெருமையும் சிறுமையும் அவரவர் செயல்களால் வெளிப்படும்.

7. இந்த உலகம் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனின் கையில் தான் உள்ளது. சுவைப்பதும் பார்ப்பதும் உணர்வதும் கேட்பதும் நுகர்வதும் நல்வழியில் நடை பெற வேண்டும். பாதை தவறினால் ஊர் போய் சேர முடியாது.

8. ஆற்றலும் பெருமையும் உடையவன் ஆணையிடுவதில் தவறில்லை. நிறை மொழி மாந்தரின் பெருமையை அவர்தம் வாய் மொழியாம் வேதங்களே உணர்த்தும். மந்திரங்கள் மாந்தர்களால் தரப்பட்டவை அல்ல. மாண்புடையோர்களால் அருளப்பட்டவை.

9. நற்பண்புகளால் உயர்ந்தோரின் வாய்ச் சொற்கள் பயனளிக்கக் கூடியவை. அத்தகையோர் சினங் கொள்ளுமாறு நாம் செயல்களைத் தூண்டினால் அதன் பயன் நம்மால் தாங்க முடியாத ஒன்றாகி விடும். சினம் கொள்வதை விடக் கொடியது சினத்தைத் தூண்டுதல்.

10. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பும், கருணையும் உடைய அறவோரே அந்தணர். அவரே இவ்வுலகத்தாரால் பாராட்டப் படுபவர். உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே துறவு. அதனை உடையாரே மேலோர்.

தொடரும் .......

Monday, February 25, 2008

2 : வான் சிறப்பு

1. இறைவனுக்கு அடுத்த படியாக இவ்வுலகத்தைக் காத்து நிற்பது மழை. அதனால் தான் தமிழன் மழையைக் கடவுளாகக் கண்டான். இறைவன் உலகும் உயிருமாய் நிறைந்து நிற்கின்றான்.

2. வானத்தில் இருந்து மழை பொழிந்து இவ்வுலகைக் காப்பதால் அது உலகத்தார்க்கு அமிழ்தமாகும்.

3. மழை உண்பவர்க்கு உண்ணக் கூடிய உணவை விளைவித்துத் தந்து இன்றியமையாத நேரத்துத் தானும் உணவாகிறது. உடலுக்கு உயிர் போல் உலகிற்கு மழைத்துளி.

4. வானம் மழை பொழியத் தவறினால் இப்பெரிய உலகத்தே பசித்துன்பம் பெருகும். உணவின்றி உயிர்கள் வாடும். கடல் சூழ்ந்த உலகென்றாலும் கண்ணீர் சிந்தும் பசியால்.

5. மேகங்கள் மழை பொழிய மறந்தால் உழவர்கள் உழுதொழில் செய்ய மாட்டர். ஏர்த்தொழில் பாரில் மறைந்தே போகும். உலகம் எப்படி வாழும் ?

6. ஆக்குவதும் அழிப்பதும் மழைக்கு கை வந்த கலை. வெள்ளப் பெருக்கால் அழிவை ஊட்டும். பஞ்சத்தைப் போக்க பார் மழை பொழியும். இதனால் இவ்வுலகிற்கு மழையே இறைவன்.

7. வானத்திலிருந்து ஒரு மழைத்துளி கூட விழா விட்டால் இம்மண்ணுலகில் சிறிய பசும் புல்லைக் கூட நாம் காண முடியாது. புல்லே முளைக்கா- தென்றால் மரம் செடி கொடிகள் பயிர்கள் தான் ஏது ? உயிர்கள் வாழ வழிதான் ஏது ?

8. மழை இல்லை யென்றால் புல் என்ன கடலே இல்லை. மேகம் வளம் குறைந்து வறண்டு போனால் வெண் மேகங்களே வானில் மிதக்கும். பின் எப்படி கடல் நீர் புரளும் ?

9. மழை பொழியாவிட்டால் மக்களுக்கு மட்டுமல்ல துயரம். மக்கள் போற்றும் தெய்வங்களுக்கும் வழி பாடில்லை. நீரின்றி பூசை எப்படி நடைபெறும் ? வாழ வழி இல்லை என்றால் வழிபாடு ஏது ?

10. மழைத்துளி இல்லை என்றால் உலகில் வாழ்க்கை முறை தடுமாறும். இல்லாதார்க்குக் கொடுக்கின்ற இல்லறத்தானும் தவமேற்கொள்ளூம் துறவறத்தானும் எப்படி வாழ்வர் ? வழியின்றித் தவிப்பர்.

நீரின்றி இந்த உலகமே இல்லை. வயிற்றுக்கு உணவின்றி, வாழ்விற்கு வழி பாடின்றி, மண்ணுக்கு வளமின்றி, வாழ்க்கை எப்படிச் சிறக்கும் ? வாழ்க்கை ஒழுக்கங்கள் எப்படி நிலைக்கும் ? மழையின்றி மண்ணுலகில் மானிடமே இல்லை ! உயிர்கள் நிலைத்து வாழ மழை இன்றியமையாது.

தொடரும் ...........

Sunday, February 24, 2008

1 : கடவுள் வாழ்த்து

1. எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளன போல் உயிர்களெல்லாம் இறைவனை முதலாகக் கொண்டுள்ளன. முதன்மைப் பண்பு தலைமைப் பண்பல்லவா? அது தரணிக்கே ஆதாரமானது!!

2. ஆற்றல் மிக்க ஆண்டவனின் திருவடிகளைத் தொழுவதே கற்றதின் பயன். இறையை வணங்காத அறிவால் பயனில்லை - பண்பில்லை.

3. மனமலரில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை மனத்தில் நினந்தவர் நிலவுலகில் நீடு வாழ்வர். நிலையற்ற உலகில் நிலையானதைப் பற்றுதல் தான் நெஞ்சுக்கு நிம்மதி.

4. விருப்பு வெறுப்பற்ற இறையடியைப் பணிந்தோர் தம்மைத் துன்பங்களிலிருந்து தூய்மைப் படுத்திக் கொள்வர். அவர்க்கு எப்பொழுதும் துன்பமில்லை - இன்பமே கூடும்.

5. செயல் மயக்கங்கள் நம்மைச் சேராதிருக்க வேண்டுமென்றால் பொருள் பொதிந்த இறையடியை நாம் நினைத்தல் வேண்டும். நன்மை தீமை எது எனறு நாம் அறியாதிருப்பதே நம் அறிவு மயக்கம். அம்மயக்கம் தீர வேண்டு மென்றால் ஆண்டவன் திருவடியை மனத்தால் நினைந்து, சொல்லால் போற்றி, கரங்களால் வழி பட வேண்டும்.

6.பொறிகளைப் புலன்வழிச் செல்லாது அடக்கிய புனிதன் இறைவன். அவனை வணங்கினால், நாம் மெய் வழிச் செல்ல நம் பொய் வழி அகலும். அவ்வழி நின்றால் நாம் நிலைத்து வாழலாம்.

7. நம் மனக்கவலை தீர வேண்டும் என்றால் தனக்குவமை இல்லாதான் தாள்களை நாம் போற்ற வேண்டும். போற்றுதல் புகழ் புரிந்தார் செயல் ஆகும். அவ்வாறு நாம் போற்றித் தொழுதால் நாம் போற்றப்படுவோம்.

8. அறக் கடலாகிய இறையடி சேர்ந்தாரே பிறவிக்கடலை நீந்திக் கரை சேர்வர். மற்றவரெல்லாம் மனமயங்கி மயக்கம் கொள்வர்.

9. எண்குணத்தான் தாள்களைப் பணியா விட்டால் நம் அறிவு குறிக்கோள் இல்லாத குப்பைமேடே ! வாழ்வில் வழி தெரியாமல் தவிப்பவர்க்கு வாழ வழி காட்டுவது வேத வடிவான இறையடிகளே !

10. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் இறை சிந்தனை இல்லாதார் இவ்வுலக வாழ்வைக் கடந்து நிற்பது முடியாத ஒன்று. நம்பிக்கை தான் வாழ்வு. அந்த வாழ்வைப் பெற வழி காட்டுபவன் வானிறைவனே ! அவனைத் தொழுவது ஒன்றே நம்வழி!!

வாழப் பிறந்த மனிதன் வாழ்க்கையைக் காண்பது வழிபாட்டிலே !

தொடரும்.........

Friday, February 22, 2008

வள்ளுவனின் வாய்மொழி

வான் மறையாம் வள்ளுவம் நாம் என்றைக்குப் படித்தாலும் அது புதுமைதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பது போல் குறள் நாளும் நமக்கொரு சேதி சொல்லும். தாசுமகாலில் உள்ள கல்லைப் பெயர்த்தாலும் பெயர்க்கலாம் - ஆனால் திருக்குறளில் உள்ள ஒரு சொல்லைப் பெயர்க்க முடியாது என்ற இம்மொழி உண்மை தான். உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

தமிழன் எதனையும் வேதமென்று எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டான். அப்படிப்பட்ட அவனே திருக்குறளை தமிழ்மறை என்று ஒத்துக் கொண்டுள்ளான் என்றால் உண்மையில் இது வியப்பன்று ! வேதம் என்பது என்ன ? மனிதனைத் துன்பத்திலிருந்து கை தூக்கி விடுவது தான் வேதம். இதனை நான் கூற வில்லை. வேத விற்பன்னன் பாரதி கூறுகின்றான். அவன் சமயங்களை எல்லாம் சாமர்த்தியமாய்ச் சந்தித்தவன்!

பக்குவப்பட்ட மனத்திற்கு பாதை காட்டுவது கீதை மட்டுமன்று - குறளும் தான்!. நினைவு - சொல் - செயல் மூன்றும் நேரியதாய் இருக்க வேண்டும் - தூயதாய் இருக்க வேண்டும் என்பது தான் திருக்குறளின் அடிப்படைக் கருத்து. அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நிலைகளிலும் இக்கருத்தே வலியுறுத்தப் படுகிறது. அவ்வழியில் முதலில் நிற்பது இறைமை!

தொடரும்........