Thursday, June 26, 2008

13 : அடக்கமுடைமை :

01 : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் ஒருவன் நல்வாழ்விற்கு வழிகாட்டி அவனை தேவரிடத்து அழைத்துச் செல்லும். அடங்காமை தீவழிச் செலுத்தி அவ்னை நரகத்தில் தள்ளிவிடும்.

02 : காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு

அடக்கமே இவ்வுயிர்க்குச் சிறந்த செல்வம். அதை விடப்பெரிய செல்வம் வேறில்லை. அதனால் நாம் காக்க வேண்டிய பொருள்களுள் அடக்கத்தை ஒன்றாகக் கொண்டு காக்க வேண்டும். உயிரையும் உடலையும் விட்டு விடுவோமா எளிதில் ? அது போல் அடக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

03 : செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

அறியவேண்டியவற்றை அறிந்து அடங்கி நடந்தால் அவ்வடக்கமே அவனுக்குப் புகழைத் தரும்.

04 : நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

இல்வாழ்க்கை நெறியில் சென்று அடக்கத்தை மேற்கொள்பவன் பெருமை மலையைக் காட்டிலும் பெரியது. மனிதன் மலை போல் தோற்றம் பெறுதல் மலைப்பான் செயலல்லவா !

05 : எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவுடைமை என்பது எல்லார்க்கும் நன்மையைத் தரும். அதிலும் செல்வர்கள் பணிந்து நடந்தால் அது அவர்கள் மேலும் ஒரு செல்வத்தைப் பெற்ற சிறப்பைத் தரும். அடக்கமே பெருஞ்செல்வம்.

06 : ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஆமை தன்னைத் துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள தன் ஓட்டினுள் ஐந்து உறுப்புகளையும் அடக்கிக் கொள்வது போல் ஒருவன் ஒரு பிறப்பில் தன் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டால் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறப்பிலும் துணை நிற்கும். ஒன்று எழானால் உயர்வல்லவா ! உவப்பல்லவா !

07 : யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

எவற்றைக் காக்காவிட்டாலும் சரி ஒருவன் தன்னுடைய நாவை மட்டுமாவது அடக்கி ஆள வேண்டும். இல்லையெனில் அவன் சொல் குற்றத்தால் துன்பப்படுவான். கல்லால் அடித்த அடியை விட வலியுடையது சொல்லால் அடித்த அடி !

08 : ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

நாவடக்கமின்றி தீச்சொற்களைப் பேசித் திரிபவனிடம் எந்த நன்மையும் பயன் தராது. ஒரு தீமை பல நன்மைகளை பயனற்று விடச் செய்யும். ஒன்று பலவற்றை அழிக்குமென்றால் அந்த ஒன்றை நாம் அடக்க வேண்டாமா ?

09 : தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

ஒருவனைத் தீயினால் சுட்ட புண் மருந்திட்டால் ஆறிவிடும். ஆனால் தீய சொற்களால் மனம் புண்படும் படி பேசிய சொற்கள் ஏற்படுத்தும் மனக்காயம் மருந்திட்டாலும் ஆறாது. வடுவை ஏறபடுத்தி விடும். புண்ணே கொடிது ! வடு அதனினும் கொடியது !

10 : கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

மனத்தே பொங்கி எழும் சினத்தை அடக்கி, கற்று அடங்கியவன் இருக்குமிடத்தைத் தேடி, அறக்கடவுள் தானே செல்வான். கற்றலின் பயன் அடங்கலே ! அதை அறிந்தவன் சினத்தை அடக்கி சொற்களை ஆளுதல் எளிது. அப்படிப்பட்ட சொற்களைக் கேட்க அறமே வழி கேட்டுச் செல்லும். அறம் நம் முன்னே வருமென்றால் நாம் அதை வரவேற்க வேண்டாமா ! அடக்கத்துடன்!

செல்விஷங்கர் - 26082008

Tuesday, June 17, 2008

சிவாசி மற்றும் சிலேபி பற்றி ......

சதங்கா அழைத்து விட்டார் - எதற்கு ?

சிவாசி வாயிலே சிலேபியாம் - இது தொடராம் - மூவர் மூவராக அழைக்க வேண்டுமாம். விதி முறைகள் கடுமையாக இருக்கின்றன.

அக்காலகட்டத்தில் ஒரு அஞ்சலட்டை வரும்( இக்காலத்திலும் தான்) - அதை 10 பேருக்கு அனுப்பினால் கோடீஸ்வரனாகலாம் - இல்லையெனில் தலை சுக்கு நூறாய்ச் சிதறும் என்று. நாங்களும் அனுப்பி அனுப்பி கோடீஸ்வரர்கள் ஆனோம்.

நிற்க ( எல்லோரும் எழுந்து நிக்காதீங்க)

எப்படித்தான் எல்லாரும் சிலேபி சுத்தறாங்களோ தெரியல - நானும் சிக்கலில்லாம ஒரு சிலேபியாச்சும் சுத்திடலாமுன்னு பாக்கறேன். அது எப்படி அடுக்கடுக்கா ! அழகழகா ! நூல் கட்டி கண்ணாடித் தடுப்புக்குள்ள - அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு !

என்ன சொன்னாலும் இந்த "ஜி" யைப் பாருங்க - எத்தன வளைவு - எத்தன நெளிவு - அந்தக் கொம்புலே - அத விடுங்க.

அந்த "லே" - அதுக்கு ஒரு தனிக்கதையே இருக்குங்க - ஆமா - ஒரு குட்டிப்பையன் வந்தான் - தமிழ் படிக்க ! மிஸ் மிஸ் நான் நவீன் - எனக்கு தமிழ் டிக்டேசனே வர மாட்டெங்குதுன்னான். "லே" போடுன்னா அவன் கேட்டான் - மிஸ் லாங்கா ஷர்ர்ட்டா ? இல்லல்ல - ஜஸ்ட் லைக் ஃபோன். எப்படி இருக்கு "லே" போட்ட கதெ. ( குறிப்பு : அவன் கேட்டது குறிலா நெடிலான்னு - ஃபோன் அப்படின்னா லாங்குன்னு பதில்)

ஒரு வேளை சிவாசி சிலேபி சாப்பிட்டாரா சாப்பிடலயான்னு யாருக்குத் தெரியும் ? எல்லாரும் சேர்ந்து அவர் வாயிலே சிலெபியைத் திணிச்சிட்டாங்க. எப்படியோ அவரும் சிலேபிய சகிச்சிக்கிட்டாரு. ஏன்னா பஜ்ஜி சொஜ்ஜி போல இல்லாம ஜூஸியா இருக்கறதாலெ ! அப்படியே வாயிலே போட்டாரு - நழுவிடுச்சி !

வீர சிவாசி பத்தி உங்களுக்கெல்லாம் தெரியுமா ? எனக்குத் தெரியுமே !!

ஏன்னா எங்க வீட்டுக் கண்ணுக் குட்டி நர்சரிலே படிச்சப்போ, "இ" போடுடா கண்ணான்னா, வேக வேகமா வந்து நாலு கோடு போடும் - "E" . இது இல்லடா கண்ணா - அ ஆ இ போடுடான்னா, சரிசரின்னு தல ஆட்டிட்டு சுத்தோ சுத்துன்னு வட்டவட்டமா சுத்தும். நிறுத்தவே நிறுத்தாது. ஏய்! ஜிலேபியா சுத்தறே நீன்னு தொடையிலே ஒரு படார். அதுக்கப்புறம் "இ"க்கண்ணா எழுதறப்ப அப்பா பக்கமே போகாது. எப்படி எங்க வீட்டு "இ".


இந்தக் கண்ணுக்குட்டி, "இ" போட்டது தான் எனக்கு இங்கே சிலேபி சுத்த உதவிச்சு. ஆமா ! அந்தக் கண்ணுக்குட்டி அதுக்கப்புறம் பாருங்க ! குட்டியா இருந்துக்கிட்டே ஒரு அஞ்சு நிமிடம் அழகான தமிழ்லே வீர சிவாசி வசனம் பேசுச்சு பாருங்க ! ஆடீட்டோரியமே அசந்து போச்சு ! எப்படி சிவாசி !

சிலேபி சாப்பிட்டா மட்டும் போதாதுங்க ! சிவாசி மாதிரி வீரமா இருக்கணும். ஜெய் பவாணி !!!
ஆமா - நானு மூணு பேர அழைக்கணுமாமில - அழைச்சிடுவோம்
1. பாசமலர்
2. புது வண்டு
3. நிலா

17.06.2008 - செல்விஷங்கர்

Sunday, June 15, 2008

கருத்துகள் மகிழும் கோப்புகள்

சின்னஞ்சிறு மலர்கள்
சிரிக்கின்றன! சிரிக்கும்
நேரம் சிந்தனைப்
பூக்கள் தெரிக்கின்றன!

தட்டித் தட்டிக்
கொடுத்து! எட்டி
எட்டிப் பார்த்த
எண்ணங்கள் நெஞ்சில்!

கட்டிக் கொடுத்த
சோறும்! கற்றுக்
கொடுத்த சொல்லும்
காலத்தில் சிறக்க!

குட்டிக் குருவிகள்
குலவும் குடும்பம்!
குழந்தைகள் கொஞ்சும்
கோகுலம்! ஆம்!

சிந்தை மணக்க
சிரித்து மகிழும்
சிறிசுகள் இங்கே!
உள்ளம் ஏங்கும்
உறவுகள் சிலிர்க்கும்!

காலம் கடந்த
பின்னும் கண்ணுள்
தோன்றும் காட்சிகள்
இங்கே! கருத்துகள்
மகிழும் கோப்புகள்!

செல்வி ஷங்கர்

Monday, June 9, 2008

ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?

அசைந்த மரங்கள்
ஆடினால் ? வீசிய
காற்று சுழற்றினால் ?
பெய்தமழை பேய்மழை
ஆனால் ? வீதி
வெள்ளம் வீட்டினுள் !!!

இடித்த வானம்
கொட்டித் தீர்த்தது !
மின்னிய மேகம்
முழங்கி முடித்தது !
நின்ற மரங்கள்
சாய்ந்து வீழ்ந்தன !
சாரியாய் நின்ற
கார்கள் சரிந்தன !

மின்விளக்கு
மின்னிமறைந்தது !
கதவுகள் படபடக்க
பெயர்ப் பலகைகள்
பெயர்ந்தன !

அடித்து ஊற்றிய
மழையில் ! வீசித்
தீர்த்த காற்றில்
வீடுகள் பறந்தன !
விடுத்த கரங்கள்
நசுங்கி வீங்கின !
விரலின் நுனிகள்
விண்டு வீழ்ந்தன !
என்னே காற்று !!
என்னே மழை !!
எங்கும் வெள்ளப்
பெருக்கு ! இருட்டு
வீதிகள் ! விழிகள்
தேடிய வெளிச்சம் !
ஓடி ஓய்ந்த
கால்கள் ! தேடும்
பாதை தெருவில் !
கையைப் பிடித்து
கண்ணொளி இன்றி
கரும் படலில்
கால்களின் நடை !

ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?

செல்வி ஷங்கர் - 09062008
-------------------------------------