Wednesday, May 28, 2008

12 : நடுவுநிலைமை

01 : அன்புடைய நண்பர், அன்பற்ற பகைவர், அறியாத அயலார் என்ற மூவரிடத்தும் நீதி தவறாது நிற்றலே நடுவுநிலைமை. அஃதே சிறந்த அறம்.

02 : நடுவுநிலைமை உடையவனின் செல்வம் அவன் வழித் தோன்றல்களுக்கு நன்மை தரும். அவனுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.

03 : நன்மையே தருவதாய் இருந்தாலும், ஒருவன் நடுவுநிலைமை தவறுதலால் வரும் செல்வத்தை ஏற்றல் கூடாது. அதை அக்கணமே விட்டொழிக்க வேண்டும்.

04 : ஒருவன் நடுவுநிலைமை உடையவனா ? அற்றவனா ? என்பது அவனுக்குப் பின் எஞ்சி நிற்கும் மக்களாலும் அவன் பெற்ற புகழ், பெருமை முதலியவற்றாலும் அறியப் படும்.

05 : ஆக்கமும் அழிவும் இந்த உலகில் புதுமையாய்த் தோன்றினவை அல்ல. நாம் தோன்றும் முன்பே அவையும் தோன்றி இருந்தன. இதனை நினைத்து நடுவுநிலைமை தவறாது இருத்தல் வேண்டும். அதுவே சான்றோர்க்கு அழகு. அதனால் அது மற்றவர்க்கும் அழகாகும்.

06 : மனம் நடுவுநிலைமை தவறிய செயல்களைச் செய்வோம் என்று எண்ணும் போதே நாம் நிச்சயம் அழிவோம் என்பதை உணர வேண்டும். நினைத்தலும் செய்தலுக்கு சமமே !

07 : நடுவுநிலைமை தவறாத ஒருவனின் வறுமை நிலையை இவ்வுலகம் இழிவாகக் கருதாது. நடுவு நிலைமையில் நின்று செயல்களைச் செய்பவனுக்கு வறுமை ஏற்படாது. ஒரு வேளை வறுமை ஏற்பட்டாலும் அது வளர்ச்சியே ஆகும்.

08 : தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு பின் தன்னிடம் இடப்பட்ட பொருள்களை சமமாகப் பங்கிட்டுத் தரும் தராசு போன்றவர்கள் சான்றோர்கள். வேண்டியவர், வேண்டாதவர், அறியாதவர் என்ற மூவரிடத்தும் சமமாக நடத்தலே சான்றோர்க்கணி.

09 : மனத்தின் கண் நடுவுநிலைமை உடையவனின் வாய்ச் சொற்கள் ஒரு போதும் குற்றம் செய்வதில்லை. சொல்லின் கண் தவறாமையே நடுவுநிலைமை. சொல்லே செயலுக்கு அடிப்படை. செயல் எண்ணத்திற்கு அடிப்படை.

10 : வாணிபத்திற்கு நடுவுநிலைமை மிக மிக இன்றியமையாதது. பிறர் பொருளையும் தன் பொருளாக நினைத்து வாணிபம் செய்திட வேண்டும். கொடுப்பதும் குறையக் கூடாது. கொள்வதும் மிகை படக் கூடாது.

செல்வி ஷங்கர்

----------------------


Monday, May 26, 2008

11: செய்ந்நன்றி அறிதல்

01 : நாம் எந்த உதவியும் செய்யாதிருக்க, நமக்கு ஒருவர் உதவி செய்வாரேயானால், அந்த உதவிக்கு இந்த மண்ணுலகையும், அந்த விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அது ஈடாகாது. செய்யாமல் செய்த உதவியின் பலன் தேடினாலும் கிடைக்காத செல்வமாகும்.

02 : தக்க காலத்தில் செய்த உதவி சிறியதாயினும் அதன் தன்மை இந்த உலகை விடப் பெரியது. காலம் தவறிச் செய்யும் உதவி கடுகளவும் பயனற்றது.

03 : எந்தப் பயனையும் எதிர்பாராமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்தால் அது கடலை விடப் பெரியதாகும். பயன் கருதாத உதவிப் பண்பு பாரில் உயர்ந்தது.

04 : செய்ந்நன்றி அறியும் பண்புடையார் ஒருவன் தினையளவு உதவி செய்திருந்தாலும் அதனைப் பனையளவாகக் கொள்வர். உதவும் செயலில் சிறுமை பெருமை இல்லை. உதவி உலகின் கடைக்கோடியில் உள்ளவரையும் சென்றடைய வேண்டும்.

05 : உதவியின் பயன் செய்யப்பட்ட செயலின் அளவைப் பொறுத்ததன்று. செய்யப்பட்டவர்களின் சால்பினைப் பொறுத்தது.

06 : நல்லவர்களின் நட்பை மறத்தல் கூடாது. துன்பத்தில் நமக்குத் துணையாய் இருந்தவர்களின் உறவை இழத்தல் கூடாது. நல்ல நட்பையும் நட்பின் துணையையும் பிரிதல் நமக்கே இழப்பு !

07 : நல்லவர்கள் தங்கள் துன்பம் துடைத்தவர்களின் நட்பை ஒரு பிறப்பிலல்ல - ஏழு பிறப்பிலும் நினைப்பர். நட்பை மறப்பது நன்றி மறந்த செயல்.

08 : ஒருவன் செய்த நன்மையை மறப்பது நன்றன்று. ஆனால் அவன் செய்த தீமையை அன்றே மறந்து விடல் மிகவும் நன்று.

09 : நமக்கு உதவி செய்த ஒருவன் பின் ஒருகால் நம் உயிரைப் போக்குவது போன்ற தீமையைச் செய்தாலும் நாம் அவன் முன்பு செய்த நன்மையை நினைத்துப் பார்த்தால் அந்த தீமையும் மறைந்து விடும்.

10 : எத்தகைய நல்லறச் செயல்களை அழித்தவனுக்கும் இவ்வுலகில் வாழ வழியுண்டு. ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவனுக்கு இவ்வுலகில் வாழ வழியே இல்லை. அவன் பாவங்களில் இருந்து தப்பிப் பிழைக்க முடியாது. செய்ந்நன்றி மறந்தவன் மனிதனே அல்லன்.

செல்வி ஷங்கர்
--------------------

Sunday, May 25, 2008

புறத்தூய்மை - அகத்தூய்மை - ஒரு சிந்தனை

நாள்தோறும் நாடேடுகளைப் பார்க்கும் போது நம்மனம் நம்மை அறியாமலே ஒன்றைச் சிந்திக்கின்றது. அச்சிந்தனையின் விளைவே இச்சித்திரம் :
------------------------------------------------------------------------------------
உண்பதும் உறங்குவதும் உடுப்பதும் தான் வாழ்க்கை என்றால் ஒரு நொடி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மனித இனம் ஒன்று தான் படைப்பிலிருந்து வளர்ந்திருக்கிறதாம். பிற உயிரினங்கள் எல்லாம் படைப்புக் காலத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறே தான் இன்று வரை இருக்கின்றனவாம் ! அப்படி என்றால் படைப்பிலேயே உயர்ந்த மக்களினம் தம் வளர்ச்சியால் பெற்ற பயனை உலகின் நன்மைக்கு வழி காட்ட வேண்டாமா ? எவ்வளவு தூரம் நாம் முயன்று முன்னேறி இருக்கின்றோமோ அந்த அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் நாம் வழி பிறழ்ந்து இருக்கிறோம். பாமரன் பத்துத் தவறு செய்தால் படித்தவன் பத்தாயிரம் தவறு செய்கின்றான் என்ற சிந்தனை காலமறிந்த உணமையாகி விட்டதே ! அத்தவற்றால் இயற்கையும் சமுதாய வளர்ச்சியும் அல்லவா கெடுகிறது ? எதிர் காலத்தைச் செவ்வையாகச் செய்ய வேண்டியவர்கள் நடைமுறையை அல்லவா பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமுதாயம் உருப்படும் ? ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி தன்னிலிருந்து நல்வழியை உருவாக்குவோம். முதலில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் ! இல்லை எனில் காற்ருக்கும் நீருக்கும் நாம் கனலாய்ப் பறக்கும் காலம் வெகு தூரத்திலில்லை. புறத்தூய்மை அகத்தூய்மைக்கு வழி காட்டும் !!!

செல்வி ஷங்கர்
--------------------

வா இங்கே !!!

காலைக் கதிரவனே !
கடலில் உதிக்கின்றாய்
மலையில் மறைகின்றாய்
மண்ணில் சிரிக்கின்றாய் !

மலர்கள் மலர்கின்றன
தளிர்கள் துளிர்க்கின்றன
மரங்கள் செழிக்கின்றன
உன்வரவால் உலகேஒளிரும் !

இளங்காலைப் பொழுதில்
இன்பம் தருகின்றாய்
இருளை மறைக்கின்றாய்
இளங்கதிரே ! வா இங்கே !
வையத்தில் வளங்காண !

10 : இனியவை கூறல்

01 : இன்சொல் என்பது அன்புடையதாய் குற்றம் நீங்கியதாய் உள்ள அருள் மனம் படைத்தாரின் வாய்ச் சொற்களே ஆகும். அன்புடைய மொழி அருள் மொழி ஆகும்.

02 : உள்ளம் உவந்து ஒரு பொருளைக் கொடுப்பதைக் கட்டிலும் சிறந்தது முகமலர்ந்து இன்சொல் பேசுதல். அதுவே இன்பம் பயக்கும்.

03 : முகமலர்ந்து நோக்கி மனமகிழ்ந்து இன்சொல் பேசுதலே அறம். சொல்லுக்கு மலர்ச்சி முகத்தில் வேண்டும்.

04 : எல்லாரிடத்தும் இன்சொல் பேசுபவர்க்கு துன்பத்தைத் தரும் வறுமை இல்லாது போகும். வறுமை கூட இனிக்கும் இன்சொல்லில்.

05 : பணிவுடையவனாயும் இன்சொல் பேசுபவனாகவும் இருப்பதே ஒருவனுக்கு அழகு. பிற அணிகலன்கள் எல்லாம் பண்பிற்கும் இன்சொல்லிற்கும் பின்னெ தான். புன்னகை பூக்கும் புதுமையான அணிகலன் இன்சொல்.

06 : நல்லவற்றை விரும்பி இன்சொற்களைக் கூறுபவனுக்கு தீமைகள் மறைந்து நன்மைகள் பெருகும். தீமை போக்கும் புது வழி இன்சொல் பேசும் நல்வழியே !

07 :பிறர்க்கு நன்மைப் பயனைத்தந்து நற்பண்பிலிருந்து தவறாத இன்சொற்கள் நமக்கு நல்வாழ்வையும் நல்வழியையும் காட்டும்.

08 : துன்பம் நீங்கிய இன்சொல் ஒருவனுக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல மறு பிறப்பிலும் இன்பத்தைத் தரும். வேதனையால் வேர்த்துவிடும் இதயம் இன்சொல்லால் குளிர்ந்து விடும். அப்போது இப்பிறப்பென்ன எப்பிறப்பும் இன்பமே !

09 : பிறர் பேசும் இன்சொற்கள் தமக்கு இன்பம் தருவதை உணர்கின்ற ஒருவன் எதற்காகத் துன்பத்தைத் தருகின்ற வன்சொற்களைப் பேச வேண்டும். புரியாத புதிர் தானே இது. இன்சொல் பேசுவதால் நா வடுப்படுவதில்லையே !

10 : இயற்கையில் இன்சொற்கள் கொட்டிக் கிடக்கின்ற போது அதை விடுத்து வேதனை தரும் கடுஞ்சொற்களை ஏன் கூற வேண்டும் ? கனியும் கனிகளை விடுத்து கசக்கும் காய்களைத் தேடி உண்பது அறியாமையன்றோ ! இன்சொல் பேசுக !! வன்சொல் பேசற்க !!

செல்வி ஷங்கர்
--------------------

Thursday, May 22, 2008

தீர்ப்பா தீர்வா ??

தடயமே இல்லாத நிகழ்வுகள்
நினைவே இல்லாத நிகழ்ச்சிகள்
நம்பிக்கை இல்லாத நடைமுறைகள்
இயந்திரங்களோடு இயங்கும் நாள்கள்
இதயங்களோடு சுமைகள் என்று
வாழ்வது தான் வாழ்க்கை என்றால்
வாய்ப்புத் தர வேண்டாமா ? மனத்திற்கு !!

செல்வி ஷங்கர்
--------------------தவம்

சோகம் எனக்கு சுகந்தம்
சுமைகள் எனக்கு வசந்தம்
தேடல் எனக்கு ஊடகம்
ஏக்கம் எனக்கு ஊக்கம்
தேக்கம் எனக்கு படிப்பினை
தெரிந்தால் அது இனிமை
தெரியாவிட்டால் புதுமை
இல்லாத பொறுமையே இருப்பிடம்
இயங்காத செயல்கள் ஏற்பிடம்
எப்படியும் ஒரு நாள் மாறும்
நம்பிக்கை தான் ........ தவம் !

செல்வி ஷங்கர்
---------------------

Monday, May 19, 2008

கோடையில் குளிர்ந்த மாலைப் பொழுது

கொட்டிய மழை
ஓடி மறைந்தது !

வெள்ளம் வடிந்த
சாலை ஓரம்
நிமிர்ந்த கிளைகள் !

ஓடிய பறவை
ஓய்ந்து நின்றது !

புதுமை ஒளியில்
புறம் நனைந்த
ஓட்டு வீடுகள் !

மின்வெட்டில்
பளிச்சிடும்
வண்டிவிளக்குகள் !

மின்னல் ஒளியில்
எட்டிப் பார்த்தால்
ஏதோ ஓரின்பம் !

கோடை வெயிலில்
குளிர்ந்த மாலைப்பொழுது !
குனிந்து குனிந்து
சின்னஞ் சிறுவர்
சிரித்து ஓடினர்
சிறிய பூக்கள்
நீரில் மிதந்தன !

செல்வி ஷங்கர்
-------------------

நேற்றுப் பெய்த மழை

சுற்றி அடித்தது காற்று
சுழற்றி அடித்தது கிளை !
கொட்டி முடித்தது மேகம்
கூவி அழைத்தது மழையை !

நனைந்து பறந்தது பறவை
மறைந்து நின்றது கிளையில் !
காற்றில் பறக்குது மழைநீர்
சாலை மறைத்தது வெள்ளம் !

சாய்ந்து ஆடின மரங்கள்
ஓடி நின்றன வண்டிகள்
ஓரம் போயினர் மக்கள்
மழையின் இடையே கால்கள்
மறைத்து மறைத்து மழலை !

செல்வி ஷங்கர்
--------------

Monday, May 5, 2008

மாற்றம்

காலைக்கு மாலை மாற்றமா ?
இல்லை !
கடலுக்கு மலை மாற்றமா ?
வேலைக்கு ஓய்வு மாற்றமா ?
இல்லை !
வேதனைக்கு சோதனை மாற்றமா ?
நினைவிற்கு நிகழ்வு மாற்றமா ?
இல்லை !
கனவிற்கு கற்பனை மாற்றமா ?
காலத்தின் மாற்றங்கள் பற்பல
அவை இயற்கையின் காவியங்களே !

குருவிக்கூடு

எண்ணப் பறவைகள்
எப்போதும் சிறகடிக்கும்
சிந்தனைகள் சிக்கித்
தவித்தாலும் சிதறல்கள்
தாவித்தான் செல்லும் !

சிறிசுகளைப் பெருசாக்க
பட்டிருக்கும் பாடெல்லாம்
படமாய் ஓடுகிறது
பாடமாய்த் தெரிகிறது
மனத் திரையில் !

கையில் பெட்டி
கால்கள் எப்போதும்
ரயிலடியில் ! காலம்
சக்கரமாய்ச் சுழன்றது
கேரளக் கரையில் !

பதிவஞ்சல் இடங்களே
புறப்படும் நேரமும்
வருகை காலமும்
மனத்தில் நடமாடக்
காலம் ஓடும் !

ஓயாத உழைப்பும்
ஒன்று சேராத
செலவும் நீராய்
சேர்ந்தோடும் நினைவு
அலைபாயும் ! நீண்ட
வெளியில் நிழலாடும் !

ஒன்றா இரண்டா
எதிர்பார்க்கும் உள்ளங்கள்
சிறுவனுக்குக் கால்சட்டை
சிறிது வளர்ந்தவனுக்கு
பள்ளிக் கட்டணம்
பாதியில் பள்ளியை
பறக்கவிட்ட பையனுக்கு
பதிவான இருப்பிடம் !

இளைய வயதில்
எதிர்காலக் கனவில்
கல்லூரிப் படிப்பை
பாத்திகட்டிய பையனுக்கு
படியேற்ற முயற்சி !

படிப்பை முடித்து
பதிவெழுத்தைப் பயின்று
பணிபார்க்கும் தம்பிக்கு
பணியக முதலீடு !

பத்துப்பேர் தவிக்கும்
பாசக் குடும்பத்தின்
பசியாற வழி !

இத்தனைக்கும் இடையில்
இருப்பதற்கு ஒர்வீடு
செங்கலாய் சிமிண்டாய்
மணலாய் மரமாய்
கம்பியாய் கருங்கல்லாய்
காசுகள் சில்லறையில் !

ஒன்றொன்றாய்
முகம்பார்க்கும்
தாயும்சேயும் !
அத்தனையும்
கையில் மறைத்து
காலங் கலங்க
கடைத்தேறி
நிமிர்கையில்
வாழவும் ஆசை !
வாழ்க்கைத் துணையின்
ஓசை ! வளரும்
பிஞ்சுகளின் பார்வை !

காலம் பறந்தது
உழைத்த கரங்களில்
உறுதி மட்டுமே
உழைப்பின் பரிசு !
இன்னும் ஒடுகிறது
கால்கள் ! இன்பத்தை
ஒருபுறம் ஒதுக்கி
ஓரமாய் வைத்து
ஒருபுன்னகை !

புதியபாதையில்
மறுபடியும் ஒரு
குருவிக்கூடு !

செல்வி ஷங்கர்
---------------------