Friday, March 28, 2008

காரிகை நடந்தாள் !!

வெளுத்த துணிகள்
வேலி ஓரத்தில்
வெயிலில் காய்ந்தன !

அவள் அங்கே
வேட்டிகளை மடித்தாள்
வெள்ளமாய் உலர்ந்தவை !

முழங்கால் தன்ணியில்
முறுக்கிப் பிழிந்தான்
உதறும் போதே
உலர்ந்தன அவை !

குழந்தைகள் மூவர்
கும்மாளம் இட்டனர்
குளிப்பதாய் நீரில்
குருவியாய் நீந்தி!

நீந்திய போது
ஒதுங்கிய இலைகள்
பந்துகள் ஆகின!
சற்று தொலைவில்
எருதுகளும் நீந்தின !

வியர்வைத் துளிகளை
வீசி எறிந்து
பிழிந்த துணியில்
ஒன்றை இடையில்
கட்டினான் அவன் !

வேலியோரப் புதரில்
வேர்வை துடைத்து
வந்து அமர்ந்தான் !
மழைநீராய் வடிந்தன
புல்லின் பரப்பில்
அவன் கால்நீர்!!

கஞ்சி ஊற்றிய
வட்டில் ஒன்று !
அருகே காய்ந்த
மீன் துண்டு !

குவளை மூன்றில்
குடிக்கக் கஞ்சி !
காரத் துவையல்
செடி இலையில் !

கூவி அழைத்தான்
குழந்தைகளை! அவர்களோ
கும்மாளம் இட்டனர்
குளிக்கும் நீரில் !

ஒட்டிய வயிறு
ஒளி வெய்யிலில்
ஏனோ தெரியவில்லை !
உவப்பாய் இருந்தது நீராடல் !

விரைந்து வந்தாள்
வெள்ளை மடித்தவள் !
முழங்கால் தண்ணியில்
மூவரையும் முங்கி எடுத்தாள் !
பொல்லாத பொடிசுகள்
மூச்சடக்கி ஓடின !

கைகளைப் பிடித்தாள்
அடித்துத் துவைத்தாள்
பட்டென்று முதுகில் !
பாய்ச்சலில் கரையேறின
காளான்கள் ! கஞ்சிக்
குவளை காலியானது!

மடித்த துணிகள்
மூட்டை ஆகின
முழங்கால் ஆடையுடன்
மூட்டையைத் தூக்கினான் !

கைப்பிடியில் கஞ்சிவாளி !
கண்மணிகள் மூவரையும்
கைவீசி வழிகாட்டி
காரிகை நடந்தாள் !!!
------------------------------------------------
Sunday, March 23, 2008

வைகையில் புது வெள்ளம்

குட்டிக் குழந்தைகள்
முட்டி மோதிச்
செல்கின்றன !

அலைஅலையாய் நீரில்
இலைத்துளிர்கள்
அங்கும் இங்கும் !

கரையோரப் பறவைகள்
நீர் மேலே நீந்தும்
நிலவொளியாய் !

பொங்கிவரும் புதுநீரில்
பூப்போன்ற துளிர்கள்
புன்னகையாய் !

புல்மேலே கால்நடைகள்
தான்மேய புதுவரவாய்
காட்டாறு !

ஓடும் நீரில்
பாடும் பறவை !
குயில் கூடும்
மரக்கிளைகள் !
சலசலக்கும் நீரோடை !

வெள்ளைநிறப் பறவை
நீர்மேல் வெண்மேகம் !
வரிசையாய்க் காகங்கள்
வரைந்துவிட்ட கோடுகள் !

வானமழை வந்துவிட்டால்
வையமகள் செழிக்கின்றாள் !
வளமான நீரோட்டம்
வைகை எங்கும் !

பூம்புனல் ஆற்றை
பூந்தளிர் ஆறாய்
மாற்றுகின்ற
புதுவெள்ளம் !Friday, March 21, 2008

7 : மக்கட்பேறு

01. இல்வாழ்க்கையில் ஒருவன் பெறும் பெரும் செல்வமென்பது நன்மக்களைப் பெறுதலே ஆகும். பிற செல்வங்களெல்லாம் அறிவும் ஆற்றலுமுடைய மக்களின் பின்னே தான்.

02. நற்பண்புடைய மக்களைப் பெற்று வளர்ப்பவனுக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல வேறு எந்தப் பிறப்பிலும் சரி பழி பாவங்கள் வந்து சேராது. அறிவுடை மக்கள் அவனியில் ஆன்ற செல்வம்.

03. இல்லறத்தார் தம்மக்களை தம் செல்வமாய்க் கொள்வர். அம்மக்களின் சிறப்பு அவர் செய்யும் செயல்களால் வெளிப்படும். மாண்புடை மக்களே மகிழ்வுறு செல்வம்.

04. அமிழ்தத்தைக் காட்டிலும் இனிமையுடையது தம் மக்கள் சிறு கைகளால் அளைந்த உணவு. பிசைந்த உணவு இனிப்பது பிஞ்சுக் கரங்களினாலே !

05. மழலைச் செல்வங்களின் மெய் தீண்டல் உடற்கின்பம். அம்மக்களின் சொற்கேட்டல் நம் செவிக்கின்பம். மழலையர் நமக்கின்பம்.

06. தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதார்தான் குழலிசையும்
யாழிசையும் இனிதென்பார்கள். இசை ஏழினும் இனியது மக்களின் இன்சொற்கள்.

07. தந்தை மகனுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மை அவனைக் கற்றோர் நிறைந்த அவையில் முதன்மை பெறச் செய்தல். கல்விச் செல்வமே மக்களுக்குச் செல்வம்.

08. நம்முடைய மக்கள் நம்மைக் காட்டிலும் அறிவாற்றல் உடையாராய்ச் சிறந்திருத்தல் நமக்கு மட்டும் இன்பமன்று. உலகிற்கே இன்பம் பயப்பதாகும்.

09. தம்மகன் உயர் பண்பாளன் என்று சான்றோரால் புகழக்கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த காலத்தை விடப் பெரிதும் மகிழ்வாள். மக்களைப் பெறுதல் மகிழ்ச்சி என்றாலும் அவர்கள் மாண்புடையோர் என்பது மகிழ்வினும் மகிழ்வாகும்.

10. தன்னை அறிவாற்றல் மிக்கவனாய் ஆக்கிய தந்தைக்கு ஒரு மகன் செய்யும் உதவி, அவன் நன்மைச் செயல் கண்டு, அத்தகையவனை மகனாய்ப் பெற அவன் என்ன தவம் செய்தானோ என்று பிறரால் பாராட்டப் படும் சிறப்பே ஆகும். பண்பு பாராட்டப் படும் மக்களைப் பெற்றிருத்தல் பெற்றோர்க்குச் சிறப்பாகும்.

தொடரும் .....

Saturday, March 15, 2008

6 : வாழ்க்கைத் துணை நலம்

1. இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகளையும் நற்செயல்களையும் உடையவளாய் தன் கணவனின் வருவாய்க்கேற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.

2. இல்லறச்சிறப்பு இல்லத்துணைவியிடம் இல்லையென்றால் வாழ்வில் மற்ற செல்வச் சிறப்புகள் இருந்தும் பயனில்லை. பண்பும், பண்புடைச் செயல்களுமே வாழ்க்கைச் செல்வம். பொருட் செல்வமெல்லாம் அதன் பின்னே தான் !

3. இல்லாள் விருந்து போற்றுதலும், வறியவர்க்கு உதவுதலும் ஆகிய நல்லறச் செயல்கள் உடையவளானால் அங்கு இல்லாதது எதுவுமே இல்லை. இந்த இல்லறச் சிறப்பு இல்லாதவளாய் அவள் இருந்தால் அங்கு எத்தகையச் செல்வச் செழிப்புகள் இருப்பினும் அது சிறக்காது.

4. கற்பென்னும் மன உறுதி உடைய பெண்ணைக் காட்டிலும் ஒருவன் அடையக் கூடிய பெருஞ்செல்வம் இவ்வுலகத்தில் எதுவுமில்லை. மன உறுதி உடைய மங்கையே மாநிலத்தின் மாநிதி.

5.தெய்வங்களைத் தொழாது கொண்ட கணவனையே தெய்வமாய்த் தொழுது எழுபவள் இவ்வுலகத்தே மழை பெய் என்றால் மழையும் பொழியும். தெய்வம் போல் செயலாற்றும் வலிமை பெண்ணுக்கும் உண்டு. அதுவும் கற்பென்னும் நிலை கைவரப்பெற்றால் !

6. கற்பு நெறி நின்று தன்னைக்காத்து தன்னைக்கொண்ட கணவனையும் தன் இல்லறக் கடமைகளால் பாதுகாத்து புகழுடைய சொற்களால் செயலாற்றி மன உறுதி தளராமல் வாழ்பவளே பெண். சொல்லறமே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும்.

7. பெண் தன் மன வலிமையால் தன் கற்பு நிலையைக் காத்துக் கொள்வதே சிறந்த காவலாகும். அதை விடுத்து அவளைச் சிறைப்படுத்தி பாதுகாப்ப தெல்லாம் ஒரு பயனையும் தராது. மனக் காவலே மாபெரும் துணை.

8. தன்னைக் கொண்டவனைத் தெய்வமாகக் கொண்டாடும் பெண்ணை தேவருலகமும் போற்றும். பண்புடைப் பாவை பாரில் தெய்வம்.

9. புகழ்ச் செயல் புரியும் மனைவியை இல்லத்துணையாய் பெறாதவன் பகைவர் முன் பெருமித நடை போட முடியாது. தலைவனுக்குப் பெருமை தலைவியின் தகமைப் பண்பால் வருவதே !

10. இல்லறப் பண்புகளே வாழ்க்கைத் துணையின் மங்கலமாகும். அவ்வில்வாழ்வில் நன் மக்களைப் பெறுதலே வாழ்க்கைக்கு அணிகலனாகும். வாழ்க்கைப் பயன் மக்களைப் பெற்று பெருமை சேர்ப்பதே !

தொடரும் ....

Saturday, March 8, 2008

அங்கே இளைப்பாறலாம் !

பசுமை இல்லாத இளமை நினைவுகள் !
பயந்தே சென்ற பார்வைத் தொலைவுகள் !
எதிர்ப்புகளே ஏணிப் படிகளான காலம் !
எங்கே ? எப்படி ? என்ன செய்வது ?
என்றே ஏங்கிய கோலம் ! எதற்கும்
தூண்டுதல் இல்லா சூழல் ! எதிலும்
நம்பிக்கை தாரா நிழல்கள் ! இவைதான்
என் கைப்பிடிச் சுவர்கள் ! இதைப்
பற்றிக் கொண்டே பறந்தது பறவை!
எண்ணப் பறவை ! அதன் சிறகுகள்
எல்லாம் உரசல்கள் தான் ! அங்கே
ஒன்றும் தெளியாத உறுதிகள் ! எங்கும்
காலத்தின் கட்டாயம் வளர்ந்தது உயரே!

வளர வளர மாறுமல்லவா சூழல் !
அப்படி ஒரு மாற்றம் ஒரு நாள் !
எதிர்ப்புகள் என் சுற்றுச் சூழல் !
அதனோடு மோதி மோதி ஒரு
வடி வானது எண்ணம் ! வாழ்வின்
வசந்தம் வயதில் வந்தது ! ஏன்
என்று கேட்கவே எவரும் இல்லை !
எதிர்ப்புகள் இல்லா உலகம் ! இங்கே
ஏணிப் படிகளே இல்லாது ஏறினேன் !
இனிமை சிறகடித்துப் பறந்தது !
அங்கே சிந்தனை சீர்மை பெற்றது !

சிறிய பறவைகள் இரண்டு சிரித்தன!
என் சிறகின் கீழே நடந்தன !
அதன் வளர்ச்சியில் என்னைக் கண்டேன் !
ஏக்கங்களுக்கு விடுதலை ! ஆம் !
விண்ணில் பறந்தது பறவை ! எண்ணில்
வியப்பாய் இருந்தது உலகம் !
சொல்லுக்கும் அசைவுக்கும் சுகந்தம் தந்தனர் !
நிமிர்ந்தது நினைவு ! எப்போதும் இல்லாத
ஏற்றம் இப்போது வந்தது ! அது வளர்ச்சி !

நிகழ்காலப் பறவை நீந்துவது நிம்மதியில் !
பாசத்தைப் பரிவைப் பண்பைக் கொட்டுவது
எங்கும் எங்கும் ! நினைவெல்லாம் நீர்நிலையில் !
மனப்பறவை மகிழ்ந்தது ! மழைத்துளியில் நனைந்தது !
மானிடம் பார்ப்பது எதனை ? மனத்தையா ?
மானிலத்தின் மொழி அன்பு தானே !
அறங்கூறும் நல்லுலகும் அது தானே !
வாருங்கள் இங்கே இளைப் பாறலாம் !
-------------------------
செல்வி ஷங்கர்
-------------------------

அறத்துப்பால் - இல்லறவியல் - 5. இல்வாழ்க்கை

1. இல்வாழ்க்கை வாழ்பவன்தான் அறவழியில் செல்பவரையும் வழி நடத்துகிறான். தான் வாழும் இல்லற ஒழுக்கத்தால் துறவியரையும் பிறரையும் ஆதரித்து அவர் நல்வழிச் செல்ல துணை புரிகிறான்.

2. துறவியர், வறியவர், ஆதரவின்றித் தம்மிடம் வந்து இறந்தோர் ஆகிய மூவர்க்கும் இல்லறத்தானே துணையாகிறான்.

3. தான் வாழும் முயற்சியால் ஈட்டிய பொருளை, தன் முன்னோர், இறைவன், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவர்க்கும் பங்கிட்டு உதவி வாழ்பவனே சிறந்த இல்லறத்தான் ஆவான்.

4. பழி பாவங்களுக்கு அஞ்சி அறவழியில் பொருளீட்டி பகுத்துண்டு வாழ்க்கை நடத்துபவனுக்கு எப்போதும் துன்பமில்லை. கொடுத்தால் இன்பம் தானே ! கொடுப்பதைத் தடுப்பது மிகவும் கொடுமை.

5. இல்வாழ்க்கையின் பண்பு அனைவரிடமும் அன்பு காட்டுதல். அவ்வாழ்க்கையின் பயன் இல்லாதார்க்குக் கொடுத்துதவும் அறச்செயல். அன்பும் அறனுமே பண்பிற் சிறந்த நெறி.

6. அன்பும் பண்பும் உடைய இல்வாழ்வில் அறமுறைப்படி வாழ்தலைக் காட்டிலும் சிறந்த பயன் பிற வாழ்க்கை முறையில் இல்லை. அவ்வழியில் போய் பெறத்தக்கதுவும் எதுவுமில்லை. துறத்தலை விட இல்லறமே இனிது.

7. தன்னை வருத்தி, தவம் செய்து மேன்மை அடைவாரை விட உயர்ந்தவன் ஒழுக்க நெறி பிறழாமல் இல்லறம் நடத்துபவனே! வாழ்க்கை ஒழுக்கம் வளங்களை எல்லாம் அள்ளித் தரும்.

8. தாமும் நல்வழியில் நின்று பிறரையும் அவ்வழியில் செலுத்தும் இல்வாழ்வான் தானமும் தவமும் செய்வாரை விட மேலானவன். வாழ்க்கையில் நல்வழியைப் பின் பற்றும் முயற்சியே முனிவரின் தவத்தினும் மேலானது.

9. அறம் என்று சொல்லப்படுவதே இல்லறம் தான். அதுவும் பிறரால் பழிக்கப்படாதிருக்குமே யானால் மேன்மையிலும் மேலானது. மனத்தால் துறப்பதே துறவு.

10. இல்லாதார்க்குக் கொடுத்தும், இல்லறத்தாரிடம் அன்பு காட்டியும், ஏதுமற்றாரை ஆதரித்தும் இவ்வுலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் அவன் வானுறையும் தெய்வத்துள் ஒருவனாகவே மதிக்கப் படுவான். வாழ்க்கை நெறி தெய்வ நெறியாகும்.

தொடரும் ......

Sunday, March 2, 2008

4 : அறன் வலியுறுத்தல்

1. வாழும் உயிர்க்கு அறத்தை விடச் சிறந்த செல்வம் எதுவுமில்லை. இவ்வுலகில் மேன்மையையும், செல்வச்செழிப்பையும் தருவது நல்லறச் செயல்களே!

2. அறத்தைப் பின்பற்றுவதால் மனிதனுக்கு நன்மையே விளையும். அதை மறப்பதால் அழிவே நேரிடும். மறந்தும் கூட உயிர்க்குத் தீங்கு செய்தல் கூடாது.

3. அறச்செயல்களை நாம் நம்மால் முடிந்த வழிகளில் எல்லாம், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இடை விடாமல் செய்ய வேண்டும். மனதால், சொல்லால், செயலால் செய்வதே அறம்.

4. மனத்தின் கண் குற்றம் இல்லாமல் செயல்களைச் செய்வதே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரச் செயல்களே ! உள்ளொன்று வைத்து புறமொன்று செய்தல் அறமாகாது.

5. பிறர் ஆக்கம் கண்ட இடத்துப் பொறாமையும், அவர் பொருள் வளர்ச்சியின் மீது ஆசையும், அது கைகூடாத போது கொள்ளும் சினமும், அச்சினத்தால் விளையும் தீய சொற்களும் நீக்கிச் செய்வது தான் அறம். குற்றங்களைத் தவிர்த்து மற்றதைச் செய்தலே நற்றவம்.

6. அறத்தை இப்போது வேண்டாம் பின் எப்போதாவது செய்து கொள்வோம் என்று எண்ணுதல் கூடாது. நம் இளமைக் காலத்தேயே நல்லறச் செயல்களைத் தொடங்கி விட வேண்டும். அவ்வாறு செய்தால் அச்செயல் நம் வாழ்நாளின் வழித் தடைகளை எல்லாம் நீக்கி விடும்.

7. அறத்தின் பயன் இத்தகையது தான் என்பதை நமக்கு யாரும் சுட்டிக் காட்ட வேண்டாம். பல்லக்கைச் சுமப்பவனும், அதில் அமர்ந்து செல்பவனும் எத்தகையவன் என்பதை நாம் பார்த்து அறிதல் போல் அறப்பயனை நாம் செய்து உணர்தல் வேண்டும்.

8. ஒருவன் தன் வாழ்நாளில் அறம் செய்யாது வீணாகக் கழித்த நாள்களே இல்லை எனும் அளவுக்கு நன்மைச் செயலைச் செய்து விடல் வேண்டும். அது அவன் துன்பங்களை எல்லாம் துடைத்து விடும்.

9. அறச் செயல்களைச் செய்வதால் வரும் இன்பமே ஒருவனுக்குச் சிறப்பாகும். அறவழி அல்லாது பிற வழிகளால் பெறப்படும் சிறப்புகள் அவனுக்குப் புகழைத் தாரா.

10. எனவே எப்படிப் பார்த்தாலும் சரி ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியவை எல்லாம் நல்லறங்களே ! தவிர்க்க வேண்டியவை எல்லாம் பொய்யறங்களே ! நன்மையைச் செய், தீமையைச் செய்யாதே என்பது வேத வாக்கல்லவா !!

பாயிர இயல் முற்றிற்று.
( அதிகாரம் 1 முதல் 4 வரை)
-------------------------------------
இல்லறவியல் தொடரும் ....