Sunday, July 27, 2008

18 : வெஃகாமை

01 : நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

நடுநிலைமை இன்றி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டால், நம் குடிச்சிறப்பும் அழிந்து நம்க்குக் குற்றங்கள் குறையாக வந்து சேரும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுதல் அழிவையே தரும்.

02 : படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

நடுவு நிலைமை தவறி நடக்க நாணுபவர்கள், பிறன் பொருளை ஆசையால் பறித்துக் கொள்ளும் பழிபடு செயலைச் செய்ய மாட்டர். செய்யத்தகாதன செய்ய நாண வேண்டும்.

03 : சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

நிலைத்த இன்பத்தை விரும்பும் நற்பண்பாளர், சிற்றின்பம் கருதி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கும் அறனில்லாச் செயலை ஒரு போதும் செய்ய மாட்டர்.

04 : இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் நல்லோர் வறுமையால் பிறர் பொருளைக் கவர நினைக்க மாட்டார்கள்.

05 : அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

அடுத்தவன் பொருளை அடைய விரும்பும் அறிவற்ற செயலைச் செய்யும் நுண்ணறிவாளரின் அறிவால் ஒரு பயனும் இல்லை ! அறிவின் பயனே நன்மை தீமை பகுத்துணர்வது !

06 : அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

நல்லறத்தை விரும்பி இல்லறம் நடத்துபவன் பொருளாசை கொண்டு பிறன் பொருளைக் கவர நினைத்தால் அவன் பெருமை கெட்டு விடும். பேராசைப் படுவதே பெருமையைக் குலைக்கும்.

07 : வேண்டற்க வெஃகியான் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.

பிறன் பொருளைக் கவர்ந்து அதனால் வரும் வளர்ச்சியை நாம் ஒருபோதும் விரும்பக் கூடாது. விரும்பினால், கவர்ந்த செல்வம் ஒரு போதும் நற்பயன் தராது. நல்வழிக்கு நற்செல்வமே உதவும்.

08 : அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

நம் செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமெனில் நாம் பிறர் கைப்பொருளைக் கவர ஆசைப் படுதல் கூடாது.

09 : அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.

அறன் அறிந்து அடுத்தவன் செல்வத்திற்கு ஆசைப்படாதவனைத் தேடி, திருமகள் தானே தான் சேருமிடம் இதுவென அறிந்து சேர்வாள்.

10 : இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

அடுத்தவன் பொருளை அடைய ஆசைப்படுவது, அழிவைத் தரும் என்பதை உணர்ந்து, பிறன் பொருளை விரும்பா பெருமையே வாழ்வில் வெற்றியைத் தரும்.

செல்வி ஷங்கர் - 27082008













3 comments:

')) said...

வள்ளுவம் பழக வாருங்கள்

')) said...

////வள்ளுவம் பழக வாருங்கள்/////

இதோ வந்துவிட்டேன். வள்ளுவர்தம் இன்குறளுக்கு இன்னும் எத்தனைக் காலம் தான் உரையெழுதிக்கொண்டிருப்பது? முடிந்தால் வெண்பாவிலோ அல்லது பிற பாவகையிலோ உரைகாண முயலுங்களேன். ஏனென்றால் திருக்குறளை என்க்குத் தெரிந்த நண்பரின் தந்தை (பெயர் இறையரசன்) விருத்தத்தில் மிக அழகாய்ச் செய்திருக்கிறார். அதுபோல் அகவற்பாவில் வேறொருவரும் செய்திருக்கிறார்.

வெண்பாவிலேயே குறளுக்கு உரைசெய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாளைய கனவு. ஆற்றல் போதாமையால் தள்ளிப்போட்டு வருகிறேன். தாங்கள் உரைசெய்யும் விதம் நன்றாக உள்ளது. ஆகையால் தாங்கள் முயலலாம்.

')) said...

அகரம் அமுதா,

காலந்தோறும் வள்ளுவத்திற்கு உரை வந்து கொண்டு தானிருக்கிறது. எனக்கென்னவோ எளிய நடையில் உரை செய்ய வேண்டும் என்று ஓர் எண்ணம். கவிதை நடையும் பாநடையும் நன்றாகவே இருக்கும். சொல்லும் பொருளும் யாப்புக்குள் அடங்க மறுக்கும் போது வெறுப்பெனக்குத் தோன்றும். வேறொன்றுமில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி