Wednesday, June 23, 2010

28 :கூடாவொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்................................................... 01
வஞ்சகத் தன்மை உடையவனின் பொய்யான தவ ஒழுக்கம் இவ்வுலகத்தாரின் நகைப்புக்கு இடமாகும். உள்ளம் அறிய உண்மை வெளிப்படும் செயற்பாடே தவம். தலை சிறந்த ஒழுக்கம் !

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்..................................................... 02
தன் நெஞ்சம் அறிய குற்றம் புரிந்தவனின் வானுயர்ந்த புகழாலும் பெருமையாலும் எவ்விதப் பயனுமில்லை !

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.........................03
மனவலிமை இல்லாதவனின் தவக்கோலம், பசு புலியின் தோல் போர்த்திக் கொண்டு பயிர் மேய்ந்த கதையாகும். ஏமாற்றுதல் என்பது வேதனைக்குரியதே !

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.......................................04
தவக்கோலம் பூண்டு தவறானவற்றைச் செய்தல் வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிக்க வலை வீசுதல் போலாகும். வேட்டையாடுதல் வேள்வியாகாது.

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் எற்றற்றென்றன்
ஏதம் பலவும் தரும்..........................................................05
ஆசைகளைத் துறந்தோம் என்று கூறிப் பொய்யான தவ ஒழுக்கம் மேற்கொள்வார் செயல் நாம் என்ன செய்தோம் என்று எண்ணி எண்ணி இரங்கும் படியான நிலையைத் தந்து விடும். மனக் கலக்கம் மாண்புறு செயலுக்கு வித்தாகாது.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணவர் இல்.......................................06
உள்ளத்தால் துறவாது துறவி போல் கோலம் கொண்டு ஏமாற்றி வாழ்பவரை விடக் கொடியவர் இவ்வுலகில் யாருமிலர். பொய்யும் போலித் தோற்றமும் ஒழுக்கம் ஆகாது.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து...............................................07
வெளித் தோற்றத்தில் குன்றி மணி போல் தோற்றம் உடையாரும் மனத்தை மறைத்துச் செயல்படுதல் மூக்கில் கரியுடைய தோற்றத்துடன் செயல்படுவது போல ஆகும்.

மனத்த(து) மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.....................................08
மனத்தில் குற்றத்தை மறைத்து மாண்புடையார் போல் செயல்படுவார் செயல், நீரில் மூழ்கி தன்னை மறைத்து, தன் செயல்களைச் செய்வது போல் ஆகும்.

கணைகொடி(து) யாழ்க்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் .........................................09
தோற்றத்தில் அன்றிச் செயலாலும் மாறுபடும் மாந்தரும் உலகில் உள்ளனர். அம்பு தோற்றத்தால் நேரானது. ஆனால் செயலால் துன்பம் தரும். யாழ் வளைவானது. ஆனால் இன்னிசை தரும்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின்...............................................10
இந்த உலகம் பழிக்கத் தக்க செயல்களை நாமும் ஒழித்து விட்டால் புறத்தோற்றங்கள் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. முடியை வளர்த்தலும் மொட்டை யடித்தலும் எதற்கு ?

செல்வி ஷங்கர்