Saturday, May 16, 2009

26 : புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -----------------------------01


தன்னுடல் வளர்ப்பதற்கு பிற உயிர்களைக் கொன்று உண்பவன் இடத்தில் அன்பும் அருளும் எப்படி இருக்க முடியும் ? ஒரு நாளும் அருள் பிறக்க வழி இல்லை. உயிர்க்கொலை கொடிது.

பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.----------------------02


பொருளைப் போற்றிப் பாதுகாக்கும் திறன் அதன் பயன் அறியார்க்கு இல்லை. ஊன் தின்பவனுக்கு உயிரைக் காக்கும் அருட்தன்மை இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.---------------------------03

படைக்கருவி கொண்டவன் நெஞ்சம் உயிர்க்கொலை ஒன்றையே நோக்கி அன்பினை மறத்தல் போல், உடல்சுவை ஒன்றையே கருதி ஊனுண்பவன் அருளை மறக்கின்றான்.

அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.-----------------------04


அன்புடமை என்பது உயிர்க்கொலை செய்யாதிருத்தல். உயிர்களைக் கொல்லுதல் அருளுடைமை அன்று. அதுவும் அவ்வூனை உண்பது நற்செயல் அன்று.


உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. ----------------------05


ஊனுண்ணாதிருப்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன். அந்நிலை மறந்து ஊனுண்பவனை நரகம் கூட விழுங்காது. நரகத்திலும் கொடியது ஊனுண்ணுதல்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.-------------06


தின்பதற்காக உயிர்க்கொலை செய்பவன் இல்லை என்றால் விற்பதற்காக உயிர்க்கொலை செய்வாரும் இல்லை. உண்பவன் இருப்பதால் தான் விற்பவனும் கொல்கின்றான்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.---------------------------07

பிறிதொரு உயிரின் உடற்புண் என்றுணர்ந்து புலால் உண்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.-----------------------------08

தெளிந்த அறிவுடையார் உயிரை இழந்த உடலின் ஊனை உண்ண ஒருநாளும் விரும்பார். அறிவுடைமை என்பது உயிர்க்கொலை செய்யாமை.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று..------------------------09

அவிப்பொருள் அளித்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விடச் சிறந்தது ஒரு உயிரை அழித்து அதன் உடல் உண்ணாதிருத்தல்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.---------------------------------10

உயிர்க்கொலை செய்யாதவனை, ஊனுணவை உண்ணாதவனை உலகத்து உயிர்கள் எல்லாம் நெஞ்சாரப் போற்றி வணங்கும்.

செல்வி ஷங்கர்
-----------------------