Friday, February 27, 2009

24 : புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு...................................... 01

இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தலும் அதன் மூலம் புகழ் பெறும்படியாக வாழ்தலுமே வாழ்க்கைப் பயன். அதைத்தவிர வேறு எதுவும் துணையன்று. ==================================================
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்...................................... 02

இவ்வுலகில் புகழ்ந்து பேசப்படும் பெருமை எல்லாம், வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுபவனின் புகழேயாகும். ==================================================
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்...................................... 03

நிலையற்ற இவ்வுலகில், அழியாது நிலைத்து நிற்பது புகழொன்றேயாகும். ==================================================
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு...................................... 04


இவ்வுலகில் நிலைத்த புகழ்ச்செயல் செய்தாரையே, மேலுலகம் போற்றும். தேவர்களை அன்று! தெய்வத்தின் மேலானது 'வறியவர்க்கு, ஒன்று ஈந்து' பெறும் புகழே.
==================================================
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது...................................... 05

வளர்ச்சியும் அழிவும் உலகத்து இயல்பு. அதில் புகழ்பட வாழும் வித்தை, ஈந்து வாழும் இன்பம் உடையவர்க்கே கைவரப் பெறும்.

==================================================
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...................................... 06

ஒரு செயலைச்செய்து புகழ்பெற முடியும் என்றால், அச்செயலால், நாம் இச்சமுதாயத்திற்கு அறிமுகமாக வேண்டும். இல்லையெனில் அச்செயலைச் செய்யாமல் இருப்பதே நன்று.
==================================================
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்...................................... 07

புகழ்பெறும் படும்படியான செயல்களைச் செய்து வாழ இயலாதவர்கள், தம் இயலாமைக்காகத் தன்னைத்தானே நொந்து கொள்ள வேண்டுமே தவிர, தன்னை இகழ்வாரை நோவதினால் ஒரு பயனும் இல்லை. ==================================================
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்...................................... 08

தனக்குப்பின், புகழ் எஞ்சி நிற்குமாறு வாழ அறியாதவர் வாழ்க்கை, பலரும் பழிக்கும் படியான வாழ்வாகிவிடும். ==================================================
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்...................................... 09

புகழ்பெறாத மக்களைச் சுமந்த நிலம், குற்றமற்ற நல்வளங்கள் எல்லாம் இழந்து நிற்கும் - மாசுற்ற மக்களால், மாசற்ற மண்ணும் கெடும்.

==================================================

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்...................................... 10

பழிநீங்குமாறு வாழ்பவர்களே, உண்மையில் உயிர் வாழ்பவர்கள். புகழ் நீங்குமாறு வாழ்பவர்கள் உயிருடன் நடமாடினாலும் உயிரற்றவர்களே!==================================================
செல்வி ஷங்கர்
==================================================

7 comments:

')) said...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
புகழ்ச்செயல் புரியலாம் வாருங்கள்!

')) said...

மக்களே ! படியுங்கள் - குறளமுதம் பருகுங்கள்

')) said...

அன்பு செல்விஷங்கர் இங்கே பாருங்கள். உங்களுக்கு பட்டாம் பூச்சி பதிவர் விருது :)

http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html

போட்டு ரெண்டு நாளாச்சு. உங்களுக்கு கிடைக்கலியாம்மா

')) said...

தோன்றிற் புகழோடு குறளுக்கு விளக்கம் சரிதானா ?

')) said...

தோன்றிற் புகழோடு குறளுக்கு விளக்கம் சரிதானா ?

')) said...

தோன்றிற் புகழோடு குறளுக்கு விளக்கம் சரிதானா ?

')) said...

ஜான் பீட்டர் - சரியான விளக்கம் தான். நாம் தோன்றிய பின் - சமுதாயத்திற்கு அறிமுகம் ஆக வேண்டும். அதற்கு ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டும். அச்செயலால் புகழ் பெற முடியும் என்றால் செய்ய வேண்டும். இல்லை எனில செய்யக் கூடாது