Wednesday, May 28, 2008

12 : நடுவுநிலைமை

01 : அன்புடைய நண்பர், அன்பற்ற பகைவர், அறியாத அயலார் என்ற மூவரிடத்தும் நீதி தவறாது நிற்றலே நடுவுநிலைமை. அஃதே சிறந்த அறம்.

02 : நடுவுநிலைமை உடையவனின் செல்வம் அவன் வழித் தோன்றல்களுக்கு நன்மை தரும். அவனுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.

03 : நன்மையே தருவதாய் இருந்தாலும், ஒருவன் நடுவுநிலைமை தவறுதலால் வரும் செல்வத்தை ஏற்றல் கூடாது. அதை அக்கணமே விட்டொழிக்க வேண்டும்.

04 : ஒருவன் நடுவுநிலைமை உடையவனா ? அற்றவனா ? என்பது அவனுக்குப் பின் எஞ்சி நிற்கும் மக்களாலும் அவன் பெற்ற புகழ், பெருமை முதலியவற்றாலும் அறியப் படும்.

05 : ஆக்கமும் அழிவும் இந்த உலகில் புதுமையாய்த் தோன்றினவை அல்ல. நாம் தோன்றும் முன்பே அவையும் தோன்றி இருந்தன. இதனை நினைத்து நடுவுநிலைமை தவறாது இருத்தல் வேண்டும். அதுவே சான்றோர்க்கு அழகு. அதனால் அது மற்றவர்க்கும் அழகாகும்.

06 : மனம் நடுவுநிலைமை தவறிய செயல்களைச் செய்வோம் என்று எண்ணும் போதே நாம் நிச்சயம் அழிவோம் என்பதை உணர வேண்டும். நினைத்தலும் செய்தலுக்கு சமமே !

07 : நடுவுநிலைமை தவறாத ஒருவனின் வறுமை நிலையை இவ்வுலகம் இழிவாகக் கருதாது. நடுவு நிலைமையில் நின்று செயல்களைச் செய்பவனுக்கு வறுமை ஏற்படாது. ஒரு வேளை வறுமை ஏற்பட்டாலும் அது வளர்ச்சியே ஆகும்.

08 : தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு பின் தன்னிடம் இடப்பட்ட பொருள்களை சமமாகப் பங்கிட்டுத் தரும் தராசு போன்றவர்கள் சான்றோர்கள். வேண்டியவர், வேண்டாதவர், அறியாதவர் என்ற மூவரிடத்தும் சமமாக நடத்தலே சான்றோர்க்கணி.

09 : மனத்தின் கண் நடுவுநிலைமை உடையவனின் வாய்ச் சொற்கள் ஒரு போதும் குற்றம் செய்வதில்லை. சொல்லின் கண் தவறாமையே நடுவுநிலைமை. சொல்லே செயலுக்கு அடிப்படை. செயல் எண்ணத்திற்கு அடிப்படை.

10 : வாணிபத்திற்கு நடுவுநிலைமை மிக மிக இன்றியமையாதது. பிறர் பொருளையும் தன் பொருளாக நினைத்து வாணிபம் செய்திட வேண்டும். கொடுப்பதும் குறையக் கூடாது. கொள்வதும் மிகை படக் கூடாது.

செல்வி ஷங்கர்

----------------------


5 comments:

')) said...

வள்ளுவம் அறிக - கருத்துகளைத் தருக

')) said...

செல்வி அம்மா,

நலமா? தமிழ் மணம் கருவிப் பட்டை ஏன், உங்கள் பதிவில் வரமாட்டேன் என்கிறது.

சற்று கவனியுங்கள்.நிறைய பேருக்கு இந்த இரண்டட்டியில் விளக்கம் இன்னும் பிடிக்கும்.:-)))).

பி.கு.:பதிவ முழுசாப் படுச்சுட்டு வந்து, மறுபடி பின்னூட்டம் போடுறேன்.சரியா? :D

')) said...

அருமையான விளக்கங்கள். எளிமையா எழுதியிருக்கிங்க அக்கா. நன்றிகள்:)

')) said...

ரசிகன்,

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

')) said...

புது வண்டே

தமிழ் மணக் கருவிப்பட்டை என்ன ஆயிற்று தெரியவில்லை.

பதிவெ மொதல்ல முழுசாப் படி - அப்புறம் மறு மொழி கொடு