Monday, May 26, 2008

11: செய்ந்நன்றி அறிதல்

01 : நாம் எந்த உதவியும் செய்யாதிருக்க, நமக்கு ஒருவர் உதவி செய்வாரேயானால், அந்த உதவிக்கு இந்த மண்ணுலகையும், அந்த விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அது ஈடாகாது. செய்யாமல் செய்த உதவியின் பலன் தேடினாலும் கிடைக்காத செல்வமாகும்.

02 : தக்க காலத்தில் செய்த உதவி சிறியதாயினும் அதன் தன்மை இந்த உலகை விடப் பெரியது. காலம் தவறிச் செய்யும் உதவி கடுகளவும் பயனற்றது.

03 : எந்தப் பயனையும் எதிர்பாராமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்தால் அது கடலை விடப் பெரியதாகும். பயன் கருதாத உதவிப் பண்பு பாரில் உயர்ந்தது.

04 : செய்ந்நன்றி அறியும் பண்புடையார் ஒருவன் தினையளவு உதவி செய்திருந்தாலும் அதனைப் பனையளவாகக் கொள்வர். உதவும் செயலில் சிறுமை பெருமை இல்லை. உதவி உலகின் கடைக்கோடியில் உள்ளவரையும் சென்றடைய வேண்டும்.

05 : உதவியின் பயன் செய்யப்பட்ட செயலின் அளவைப் பொறுத்ததன்று. செய்யப்பட்டவர்களின் சால்பினைப் பொறுத்தது.

06 : நல்லவர்களின் நட்பை மறத்தல் கூடாது. துன்பத்தில் நமக்குத் துணையாய் இருந்தவர்களின் உறவை இழத்தல் கூடாது. நல்ல நட்பையும் நட்பின் துணையையும் பிரிதல் நமக்கே இழப்பு !

07 : நல்லவர்கள் தங்கள் துன்பம் துடைத்தவர்களின் நட்பை ஒரு பிறப்பிலல்ல - ஏழு பிறப்பிலும் நினைப்பர். நட்பை மறப்பது நன்றி மறந்த செயல்.

08 : ஒருவன் செய்த நன்மையை மறப்பது நன்றன்று. ஆனால் அவன் செய்த தீமையை அன்றே மறந்து விடல் மிகவும் நன்று.

09 : நமக்கு உதவி செய்த ஒருவன் பின் ஒருகால் நம் உயிரைப் போக்குவது போன்ற தீமையைச் செய்தாலும் நாம் அவன் முன்பு செய்த நன்மையை நினைத்துப் பார்த்தால் அந்த தீமையும் மறைந்து விடும்.

10 : எத்தகைய நல்லறச் செயல்களை அழித்தவனுக்கும் இவ்வுலகில் வாழ வழியுண்டு. ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவனுக்கு இவ்வுலகில் வாழ வழியே இல்லை. அவன் பாவங்களில் இருந்து தப்பிப் பிழைக்க முடியாது. செய்ந்நன்றி மறந்தவன் மனிதனே அல்லன்.

செல்வி ஷங்கர்
--------------------

7 comments:

')) said...

வருக கருத்துத் தருக

')) said...

எளிதாக சிறப்பாக இருக்கின்றது திருக்குறளின் விளக்கங்கள்....
நன்றி.. தொடருங்கள்.

')) said...

மேடம்,

அழகான எளிமையான வரிகள். ஒரு சிறு விண்ணப்பம் குறளையும் தந்து, பொருளையும் தரலாமே ?

')) said...

தமிழ் பிரியன்,

வருகைக்கு நன்றி

எளிதான மொழி நடை தான் பதிவின் நோக்கமே !!

')) said...

சதங்கா

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

விண்ணப்பத்தைப் பரிசீலிக்கிறேன் - செய்ய முயலுகிறேன்

Anonymous said...

Nalla muyarchi. Nalla Tamil. Vaalga Valamudan.

Anbudan Jeyakumar
Pudukkottai

')) said...

ஜெயக்குமார்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

தமிழ் தட்டச்சு செய்யலாமே