Thursday, April 10, 2008

9 : விருந்தோம்பல்

01. பொருளீட்டி நாம் மனைவி மக்களுடன் மகிழ்வாய் வாழ்வதெல்லாம் நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று உதவி செய்வதற்கே ! வாழ்க்கை விருந்தில் மகிழும்.

02. நாம் விருந்தினரை வெளியே நிறுத்தி விட்டு தனித்து உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கதன்று. விருந்தை விடுத்து நாம் மட்டும் உண்பது விடமே ஆகும்.

03. நாளும் வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்புடன் உண்பித்து உதவி செய்பவன் வாழ்க்கையில் வறுமை என்பதே இல்லை. இல்லாமை கூட அவன் செயலில் இனிமையாகி விடும்.

04. அகமும் முகமும் மலர விருந்து போற்றுபவன் இல்லத்தில் செல்வத் திருமகள் மனம் மகிழ்ந்து வீற்றிருப்பாள். செல்வச் செழிப்பு செயலாய் வெளிப்படும்.

05. விருந்தினரை வரவேற்று உணவளித்து அன்பு வாழ்க்கை நடத்துபவன் நிலத்துக்கு விதை விதைக்காமலே பயிர் விளையும். அன்பை விதைத்தால் அகிலம் வாழும்.

06. தன் வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்று வழி அனுப்பி, இனி வரும் விருந்தினரை எதிர் நோக்கிக் காத்திருக்கும் மனம் படைத்தவன் வானுலகத் தேவர்கள் வரவேற்கும் விருந்தாவான்.

07. விருந்தோம்பலின் பயன் இத்தகையது என்று அளவிட முடியாது. அது ஓர் தவம். அத்தவத்தின் அளவு நாம் வரவேற்கும் விருந்தின் தனமையைப் பொறுத்தது. அன்பும் இன்சொல்லும் விருந்தை இனிமையாக்கும். நம் மனத்தை மென்மையாக்கும்.

08. பொருட்பயனை அடைய விரும்புவோர் விருந்தினைப் போற்றுவர். அவ்வாறு விருந்து போற்றாதவர்கள் வருந்திப் பொருள் சேர்த்தும் பயனில்லை. செல்வத்துப் பயனே ஈதல்.

09. விருந்து போற்றுதலே அறம். இதனை அறியாதார் அறியாதாரே ! பெருஞ் செல்வராயினும் விருந்து போற்றாதவர் வறியவரே ! செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.

10. விருந்தினர் மிக மென்மையானவர்கள். அவர்களை இனிமையாய் நோக்க வேண்டும். அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தால் வாடும். ஆனால் விருந்தினரோ முகம் மாறுபட்டு நோக்கினாலே மனம் வாடி விடுவர். மலரினும் மெல்லிது அன்பு மனம்.

தொடரும் .....






05