Sunday, April 6, 2008

8 : அன்புடைமை

01 : அன்பிற்கு பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் இல்லை. அன்புடையாரின் துன்பம் கண்ட இடத்து நம்மை அறியாமல் நம் கண்கள் கசிந்து சிந்தும் கண்ணீர்த் துளிகளே நம் அன்பை வெளிப்படுத்தி விடும்.

02 : அன்பில்லாதவர்கள் அனைத்துப் பொருள்களின் மீதும் ஆசை கொண்டு எல்லாம் தம்முடையதென்பர். ஆனால் அன்புடையாரோ தம் பொருள் மட்டுமல்ல தம் உடம்பும் கூட பிறர்க்கு உதவுதற்கே என்பர்.

03 : அன்புடன் வாழ்கின்ற வாழ்க்கை தான் நாம் உயிரோடு வாழ்கின்றோம் என்பதற்குப் பொருள். அன்பின்றி உடலும் உயிரும் பெற்று இயங்கும் வாழ்க்கை அத்துனை சிறப்புடையதன்று.

04: அன்பு பிறரிடம் ஆர்வத்தைத் தூண்டும். அந்த ஆர்வம் அவரிடம் நமக்கு நட்பைத் தரும். அந்த நட்புச் செல்வம் எவராலும் எளிதாக அடைய முடியாத செல்வம்.

05: அன்புடையாராய் வாழ்வது தான் வாழ்க்கையின் பயன். அந்த அன்பு நமக்கு வாழ்வின் இன்பத்தைத் தந்து விடும். அறத்தின் பயனே அன்பு செலுத்துதல் தான்.

06: அறியாதவர்கள் நன்மைக்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று எண்ணுவர். ஆனால் நம் பகையையும் நமக்கு வரும் தீமையையும் கூட நாம் அன்பால் வென்று விடலாம்.

07: எலும்பில்லாத உயிர்களை வெயில் சுட்டெரிப்பது போல வாழ்வில் அன்பில்லாதவர்களை அறநெறி துன்புறுத்தும்.

08: உள்ளன்பு இல்லாத வாழ்க்கை பாலைவனத்தில் பட்ட மரம் துளிர்ப்பதைப் போன்றது. ஒரு நாளும் பட்ட மரம் அதுவும் பாலைவனத்தில் செழிப்பதில்லை. அது போன்று தான் அன்பில்லா வாழ்க்கையும் வளம் தராது.

09: உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புற உறுப்புகள் எல்லாம் இருந்தும் பலனில்லை. அன்பு ஒன்றே நம்மை இயக்கும் உயிர் போன்றது.

10: அன்பில்லாத வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை. அன்போடு வாழ்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன். அத்தகைய அன்பு உள்ளத்தில் இல்லாதவன் இயக்கம் வெறும் எலும்பும் தோலும் போர்த்திய உடம்பின் இயக்கமே ஆகும்.

தொடரும் .....