Saturday, November 1, 2008

21 : தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. ( 201)
தீச்செயல்களைச் செய்ய தீயோர் அஞ்ச மாட்டர். ஆனால் மேலோரோ அஞ்சி நடுங்குவர்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். ( 202)
தீய செயல்களால் வரும் துன்பங்கள் மிகப் பெரிது. ஆதலால் அவை தீயைக் காட்டிலும் கொடியதாய் எண்ணப்படும். தீ தொட்டால் தான் சுடும். தீச் செயல்களோ நினைத்தாலே தீங்கு வரும்.

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். (203)
பகைவர்க்கும் தீங்கு நினையாதிருத்தலே அறிவினுள் எல்லாம் தலை சிறந்த அறிவாகும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)
மறந்தும் கூடப் பிறர்க்குத் தீங்கு நினையாதே ! நினைத்தால் உனக்கே அத்துன்பங்கள் வந்து சேரும்.

இலனன்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
ஏதும் அற்றவன் என்ற இல்லாமையால் கூட நீ தீச்செயல்களைச் செய்யாதே ! செய்தால் இன்னும் நீ வறுமைத் துன்பத்தால் வாட நேரிடும்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தவன். ( 206)
துன்பங்கள் தன்னைத் தொடரவேண்டாம் என்று எண்ணுபவன் பிறர்க்குத் துன்பம் தரும் தீச்செயல்களைச் செய்யாது இருத்தல் வேண்டும்.

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். ( 207)
எத்தகைய கொடிய பகை பெற்றாரும் அதிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால் பிறருக்குத் தீங்கு செய்தவர் அத்தீங்கிலிருந்து தப்பி வாழ்தல் அரிது.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று. (208)
நம் நிழல் நம்மை விட்டுப் பிரியாது நம் காலடியிலேயே உறைவது போல் தீங்கு செய்தார் கெடுதல் என்பது நிச்சயம்.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தோண்றும்
துன்னற்க தீவினைப் பால். (209)
தன் நல்வாழ்வினை விரும்பக் கூடிய ஒருவன் எவ்வகையிலும் பிறர்க்குத் தீவினை செய்ய நினைத்தல் கூடாது. தீமை என்றும் நன்மையைத் தராது.

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். (210)
தீவழிச் சென்று தீச்செயல் செய்யாதவன் என்றால் அவன் நல்லவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

செல்வி ஷங்கர்

3 comments:

')) said...

நண்பர்களே ! குறளமுதம் பருக வருக !

')) said...

குறள் அமுதமாய் இருந்தது
நான் உங்க குரலை சொல்லவில்லை. செல்விஷங்கர்

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வலை வாசகரே !