கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லொ உலகு. 01
பயன்கருதாது பொழியும் மழை போன்றதுதான் அனைவரிடமும் அன்பைப் பொழிந்து செய்யும் உதவியும் ! மழைக்கு இவ்வுலகத்தார் எவ்வித உதவியும் செய்வதில்லை ! ஆனாலும் அது இவ்வுலகை காத்துக் கொண்டுதான் இருக்கிறது !
------------------------------------------------------------------------------------------
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 02
பாடுபட்டுத் தன்முயற்சியால் சேர்த்த செல்வங்கள் எல்லாம் தகுதி உடைய பிறர்க்கு உதவுதற்கே !
------------------------------------------------------------------------------------------
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 03
தேவருலகத்தும் பெறமுடியாதது ! வேறு எவ்வுலகத்தும் காணமுடியாதது !நாம் இவ்வுலகத்தே பிறருக்கு உதவி வாழும் அன்பின் சிறப்பு !
------------------------------------------------------------------------------------------
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 04
பிறர்க்கு உதவி செய்து வாழ்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன் ! அவ்வாறு இல்லாதவன் வாழ்க்கை உயிரற்ற வாழ்வே ஆகும் !
------------------------------------------------------------------------------------------
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 05
பிறர்க்கு உதவுபவனின் செல்வம் ஊரின் நடுவே உள்ள குளம் நீர் நிறைதலைப் போன்றது !
------------------------------------------------------------------------------------------
பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். 06
உதவும் மனப்பான்மை உடையவனின் பெருஞ்செல்வம் பயன் தரும் மரம் ஊரின் நடுவே பழுத்ததைப் போன்றது !
------------------------------------------------------------------------------------------
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 07
ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழும் பெருந்தன்மை உடையவனின் செல்வம் மருந்து மரம் போன்றது. நோயகற்றும் மருந்து போல் பிறர் துன்பம் போக்கும் செல்வம் !
------------------------------------------------------------------------------------------
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். 08
வறுமை வந்துற்ற போதும் உதவி செய்யத் தயங்காதவர்கள் ஒப்புரவாளர்கள். உலகியல்பை அறிந்து உதவி வாழும் வாழ்வை மேற்கொண்டவன் வறுமையைக் கண்டு அஞ்ச மாட்டான்.
------------------------------------------------------------------------------------------
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு. 09
அடுத்தவர்க்கு உதவும் அன்பு மனங்கொண்டவன் தன் வறுமையை நினைத்துக் கலங்க மாட்டான். பொருளின்மையால் பிறர்க்கு உதவமுடிய வில்லையே என்ற நிலையை நினைத்துத் தான் மனம் வருந்துவான் !
------------------------------------------------------------------------------------------
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து . 10
ஒப்புரவு செய்வதால் கேடு வரும் என்றால் அக்கேட்டை ஒருவன் தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அது தன்னிலும் உயர்ந்ததாகும். உதவுதால் ஒரு போதும் கேடு வராது.
------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment