01 : பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
பலரும் வெறுக்கும் படியான பயனற்ற சொற்களைப் பேசித்திரிபவன் எல்லாராலும் இகழப் படுவான்.
02 : பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது
பலர் முன்னிலையிலும் பயனற்ற சொற்களைச் சொல்லித் திரிபவன் அன்பற்ற சொற்களை நண்பர்களின் முன் சொல்லித் திரிதலை விடத் துன்பம் அடைவான்.
03 : நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை
ஒருவன் பயனற்றவன் என்பதை அவன் பேசும் வீணான சொற்களே காட்டி விடும். சொல் பயனுடையதாய் நயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
04 : நயண்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து
பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பேசித் திரிபவனை அவன் சொற்களே அவனை நல்வழியில் இருந்து நீக்கிவிடும். நுணலும் தன் வாயால் கெடுவது இயற்கையே !
05 : சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நேர்மை உடையார் சொலின்.
நற்பண்புடையார் பயனற்ற வெற்றுச் சொற்களைக் கூறினால் அவர்தம் புகழும் பெருமையும் போய் விடும்.
06 : பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்
பயனற்ற சொற்களைப் பேசித் திரிபவனை மனிதன் என்று சொல்வதை விட மக்களுள் பிறந்த பதர் என்று சொல்லுதல் வேண்டும்.
07 : நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
நல்ல சொற்களைச் சொல்லா விட்டாலும் பரவாயில்லை. சான்றோர் பயன் தராத இழிசொற்களைச் சொல்லாதிருத்தல் நன்று
08: அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இலாத சொல்
அறிதற்கரிய ஆற்றல் மிக்கார் ஒருநாளும் பெரும்பயன் தராத வீண்சொற்களைச் சொல்ல மாட்டர்.
09 : பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
அறிவு மயக்கம் நீங்கிய நல்லறிவு உடையார் மறந்தும் கூட பயனற்ற சொற்களைக் கூறார். மறதி மனிதனின் விரோதி - எவ்விடத்தாயினும் சரி !
10 : சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
சொல்லில் பயனுடைய சொற்களைச் சொல்ல வேண்டும். பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தல் வேண்டும்.
செல்வி ஷங்கர் - 30092008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
சோதனை மறுமொழி
Post a Comment