Friday, March 28, 2008

காரிகை நடந்தாள் !!

வெளுத்த துணிகள்
வேலி ஓரத்தில்
வெயிலில் காய்ந்தன !

அவள் அங்கே
வேட்டிகளை மடித்தாள்
வெள்ளமாய் உலர்ந்தவை !

முழங்கால் தன்ணியில்
முறுக்கிப் பிழிந்தான்
உதறும் போதே
உலர்ந்தன அவை !

குழந்தைகள் மூவர்
கும்மாளம் இட்டனர்
குளிப்பதாய் நீரில்
குருவியாய் நீந்தி!

நீந்திய போது
ஒதுங்கிய இலைகள்
பந்துகள் ஆகின!
சற்று தொலைவில்
எருதுகளும் நீந்தின !

வியர்வைத் துளிகளை
வீசி எறிந்து
பிழிந்த துணியில்
ஒன்றை இடையில்
கட்டினான் அவன் !

வேலியோரப் புதரில்
வேர்வை துடைத்து
வந்து அமர்ந்தான் !
மழைநீராய் வடிந்தன
புல்லின் பரப்பில்
அவன் கால்நீர்!!

கஞ்சி ஊற்றிய
வட்டில் ஒன்று !
அருகே காய்ந்த
மீன் துண்டு !

குவளை மூன்றில்
குடிக்கக் கஞ்சி !
காரத் துவையல்
செடி இலையில் !

கூவி அழைத்தான்
குழந்தைகளை! அவர்களோ
கும்மாளம் இட்டனர்
குளிக்கும் நீரில் !

ஒட்டிய வயிறு
ஒளி வெய்யிலில்
ஏனோ தெரியவில்லை !
உவப்பாய் இருந்தது நீராடல் !

விரைந்து வந்தாள்
வெள்ளை மடித்தவள் !
முழங்கால் தண்ணியில்
மூவரையும் முங்கி எடுத்தாள் !
பொல்லாத பொடிசுகள்
மூச்சடக்கி ஓடின !

கைகளைப் பிடித்தாள்
அடித்துத் துவைத்தாள்
பட்டென்று முதுகில் !
பாய்ச்சலில் கரையேறின
காளான்கள் ! கஞ்சிக்
குவளை காலியானது!

மடித்த துணிகள்
மூட்டை ஆகின
முழங்கால் ஆடையுடன்
மூட்டையைத் தூக்கினான் !

கைப்பிடியில் கஞ்சிவாளி !
கண்மணிகள் மூவரையும்
கைவீசி வழிகாட்டி
காரிகை நடந்தாள் !!!
------------------------------------------------








9 comments:

')) said...

மக்களே !! படியுங்கள் !! கருத்துகளைக் கூறுங்கள் !!!

')) said...

படிக்க படிக்க கண்முன்னே
காட்சிகள் விரிந்தன.
எங்களூரில் இக்காட்சிகளை
முன்கண்டதால் இருக்கும்
என நினைத்தேன்.

திரும்பவும் படித்தபோது
நான் நினைத்தது
தவறென உணர்ந்தேன்.
தங்களின் எழுத்துக்களின்
வலிமை உணர்ந்து.

வெளுத்த துணிகள்
ஆயிரம் இருந்தாலும்
வெளுத்தவனிடம் மிஞ்சியது
என்னவோ?

')) said...

காட்சிகளைக் கண்முன் நிறுத்துகிறீர்கள் அம்மா.

//குவளை மூன்றில்
குடிக்கக் கஞ்சி !
காரத் துவையல்
செடி இலையில் !//

எனக்கே சாப்பிடணும்போல இருக்கு! :)

')) said...

//கைப்பிடியில் கஞ்சிவாளி !
கண்மணிகள் மூவரையும்
கைவீசி வழிகாட்டி
காரிகை நடந்தாள் !!!//

செல்வி அம்மா,

நலமா! :) 66 வரிகளும் அருமையான ஓவியம் போல் கண் முன்னே விரிந்தன். என்னை நினைவிருக்கிறதா?

கஞ்சியும் காரத்துவையலும், கட்டிக் கொண்டு, எங்க blog-குக்கும் கொஞ்சம் வாங்க...

http://naanpudhuvandu.blogspot.com/

thnx in advance :)

')) said...

சின்னதொரு வலி..படித்து முடிக்கையில்..மீண்டும் காட்சிகள் கண்முன் விரிகிறது..

')) said...

நிஜமா நல்லவன்

உழைத்தவனுக்கு எப்போதும் மிஞ்சுவது மன நிறைவுதான். வேலையை வேளையில் முடிப்பது வேள்வி அல்லவா ? வியர்வை தரும் இன்பம் வேறு செல்வங்கள் தருமா ?எளிமையில் அத்தனை சுவை - வருகைக்கு நன்றி - நல் வாழ்த்துகள்.

')) said...

கவிநயா,

கஞ்சி குடிப்பதும் ஒரு சுகமான அனுபவம் தான். அதிலும் குழந்தைகளை ஒழுங்காய்க் குடிக்க வைப்பது ஒரு பெருமகிழ்ச்சி தான். வேலையின் நடுவில் இந்தப் பிஞ்சுகளையும் இழுப்பது இன்பமல்லவா. நன்றி - வாழ்த்துகள்

')) said...

புது வண்டே

சிறகடித்துப் பறக்கும் போது சிந்தனைகள் கவிதையின் பக்கமும் இருக்கட்டும். கட்டுச் சோறு கட்டிக் கொண்டு கால் கடுக்கச் சென்று காட்சிகளைக் காண்பது கருத்துக்கும் சுவை தானே ! மனதுக்கும் சற்று சுவை குறையுமல்லவா

சிறகுகள் மேன்மேலும் பறக்க வாழ்த்துகள்

')) said...

பாசமலர்,

சின்ன வலிகள் சில நேரம் சுகமாய்
இருக்கும் மனத்திற்கு. கண்ணுக்குள் காட்சிகள் விரிவது மனதுக்குள் மத்தாப்பன்றோ !!

நன்றி நல் வாழ்த்துகள்