Saturday, March 15, 2008

6 : வாழ்க்கைத் துணை நலம்

1. இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகளையும் நற்செயல்களையும் உடையவளாய் தன் கணவனின் வருவாய்க்கேற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.

2. இல்லறச்சிறப்பு இல்லத்துணைவியிடம் இல்லையென்றால் வாழ்வில் மற்ற செல்வச் சிறப்புகள் இருந்தும் பயனில்லை. பண்பும், பண்புடைச் செயல்களுமே வாழ்க்கைச் செல்வம். பொருட் செல்வமெல்லாம் அதன் பின்னே தான் !

3. இல்லாள் விருந்து போற்றுதலும், வறியவர்க்கு உதவுதலும் ஆகிய நல்லறச் செயல்கள் உடையவளானால் அங்கு இல்லாதது எதுவுமே இல்லை. இந்த இல்லறச் சிறப்பு இல்லாதவளாய் அவள் இருந்தால் அங்கு எத்தகையச் செல்வச் செழிப்புகள் இருப்பினும் அது சிறக்காது.

4. கற்பென்னும் மன உறுதி உடைய பெண்ணைக் காட்டிலும் ஒருவன் அடையக் கூடிய பெருஞ்செல்வம் இவ்வுலகத்தில் எதுவுமில்லை. மன உறுதி உடைய மங்கையே மாநிலத்தின் மாநிதி.

5.தெய்வங்களைத் தொழாது கொண்ட கணவனையே தெய்வமாய்த் தொழுது எழுபவள் இவ்வுலகத்தே மழை பெய் என்றால் மழையும் பொழியும். தெய்வம் போல் செயலாற்றும் வலிமை பெண்ணுக்கும் உண்டு. அதுவும் கற்பென்னும் நிலை கைவரப்பெற்றால் !

6. கற்பு நெறி நின்று தன்னைக்காத்து தன்னைக்கொண்ட கணவனையும் தன் இல்லறக் கடமைகளால் பாதுகாத்து புகழுடைய சொற்களால் செயலாற்றி மன உறுதி தளராமல் வாழ்பவளே பெண். சொல்லறமே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும்.

7. பெண் தன் மன வலிமையால் தன் கற்பு நிலையைக் காத்துக் கொள்வதே சிறந்த காவலாகும். அதை விடுத்து அவளைச் சிறைப்படுத்தி பாதுகாப்ப தெல்லாம் ஒரு பயனையும் தராது. மனக் காவலே மாபெரும் துணை.

8. தன்னைக் கொண்டவனைத் தெய்வமாகக் கொண்டாடும் பெண்ணை தேவருலகமும் போற்றும். பண்புடைப் பாவை பாரில் தெய்வம்.

9. புகழ்ச் செயல் புரியும் மனைவியை இல்லத்துணையாய் பெறாதவன் பகைவர் முன் பெருமித நடை போட முடியாது. தலைவனுக்குப் பெருமை தலைவியின் தகமைப் பண்பால் வருவதே !

10. இல்லறப் பண்புகளே வாழ்க்கைத் துணையின் மங்கலமாகும். அவ்வில்வாழ்வில் நன் மக்களைப் பெறுதலே வாழ்க்கைக்கு அணிகலனாகும். வாழ்க்கைப் பயன் மக்களைப் பெற்று பெருமை சேர்ப்பதே !

தொடரும் ....

7 comments:

')) said...

சோதனை மறு மொழி

')) said...

நல்ல பதிவு.

')) said...

இது என்ன சிவா , படித்தபின் கருத்தா அல்லது படிக்காமலேயே கருத்தா ? எப்படியாயினும் நன்றி சிவா

')) said...

கற்பை பற்றி சொன்ன இந்த பதிவு மிக நல்ல பதிவு.

படித்தே போடப்பட்ட பின்னூட்டம் அது.

')) said...

நன்று சிவா நன்று - படித்தது எனக்கும் தெரியும் சிவா

')) said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பொறுமையுடன் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பிற பதிவுகளையும் படிக்கவேண்டும். தங்களுக்கும் வலைப்பூ முகவரி தெரிவித்த சீனா சார் அவர்களுக்கும் என் பணிவான வணக்கமும் நன்றிகளும்.

')) said...

பாரதி, வலைப்பூவில் பார்வை பதித்து வலுவான சிந்தனை சேர்த்து தமிழில் மகிழலாம். தமிழ்ப்பாக்கள் படித்தால் நம் நெஞ்சம் மகிழும். வாழ்த்துகள்