01. இல்வாழ்க்கையில் ஒருவன் பெறும் பெரும் செல்வமென்பது நன்மக்களைப் பெறுதலே ஆகும். பிற செல்வங்களெல்லாம் அறிவும் ஆற்றலுமுடைய மக்களின் பின்னே தான்.
02. நற்பண்புடைய மக்களைப் பெற்று வளர்ப்பவனுக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல வேறு எந்தப் பிறப்பிலும் சரி பழி பாவங்கள் வந்து சேராது. அறிவுடை மக்கள் அவனியில் ஆன்ற செல்வம்.
03. இல்லறத்தார் தம்மக்களை தம் செல்வமாய்க் கொள்வர். அம்மக்களின் சிறப்பு அவர் செய்யும் செயல்களால் வெளிப்படும். மாண்புடை மக்களே மகிழ்வுறு செல்வம்.
04. அமிழ்தத்தைக் காட்டிலும் இனிமையுடையது தம் மக்கள் சிறு கைகளால் அளைந்த உணவு. பிசைந்த உணவு இனிப்பது பிஞ்சுக் கரங்களினாலே !
05. மழலைச் செல்வங்களின் மெய் தீண்டல் உடற்கின்பம். அம்மக்களின் சொற்கேட்டல் நம் செவிக்கின்பம். மழலையர் நமக்கின்பம்.
06. தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதார்தான் குழலிசையும்
யாழிசையும் இனிதென்பார்கள். இசை ஏழினும் இனியது மக்களின் இன்சொற்கள்.
07. தந்தை மகனுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மை அவனைக் கற்றோர் நிறைந்த அவையில் முதன்மை பெறச் செய்தல். கல்விச் செல்வமே மக்களுக்குச் செல்வம்.
08. நம்முடைய மக்கள் நம்மைக் காட்டிலும் அறிவாற்றல் உடையாராய்ச் சிறந்திருத்தல் நமக்கு மட்டும் இன்பமன்று. உலகிற்கே இன்பம் பயப்பதாகும்.
09. தம்மகன் உயர் பண்பாளன் என்று சான்றோரால் புகழக்கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த காலத்தை விடப் பெரிதும் மகிழ்வாள். மக்களைப் பெறுதல் மகிழ்ச்சி என்றாலும் அவர்கள் மாண்புடையோர் என்பது மகிழ்வினும் மகிழ்வாகும்.
10. தன்னை அறிவாற்றல் மிக்கவனாய் ஆக்கிய தந்தைக்கு ஒரு மகன் செய்யும் உதவி, அவன் நன்மைச் செயல் கண்டு, அத்தகையவனை மகனாய்ப் பெற அவன் என்ன தவம் செய்தானோ என்று பிறரால் பாராட்டப் படும் சிறப்பே ஆகும். பண்பு பாராட்டப் படும் மக்களைப் பெற்றிருத்தல் பெற்றோர்க்குச் சிறப்பாகும்.
தொடரும் .....
Friday, March 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
மறுமொழி இடுங்கள் மக்களே !!!
மக்கட்செல்வத்தின் மாண்பினை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்.
படிக்க சுலபமா இருக்குங்க. நன்றி. அய்யாவிடம் உரையாடினேன். ஒரு தனிமடல் அனுப்பிவைக்கிறேன். தவராக நினைக்கவில்லையெனில் பதிலளிக்கவும்.
குழந்தைச் செல்வங்களின் சிறப்பை எளிய தமிழில் படித்த போது இரட்டிப்பு மகிழ்ச்சி..
வருக ஜீவா - மக்கட்செல்வம் மகிழ்வூட்டும் செல்வமே ! அதை நினையும் தோறும் நெஞ்சம் நெகிழும். அதை வள்ளுவர் மொழியில் படிக்கும் போது அன்பு கொட்டும். நன்றி ஜீவா
மலர், நலமா, குழந்தைகளின் கொஞ்சு மொழிகள் நம்மைக் கொள்ளை கொள்ளும். வள்ளுவரின் வாய்மொழியில் வளம் பொழியும். நன்றி மலர்
மௌளி, குறளை எளிமையாகவும் இனிமையாகவும் கொண்டு சேர்க்க வேண்டுமென்பது எனது அவா. அவ்வெண்ணமே நான் குறளைப் படிக்கும் போதெல்லாம் தலை தூக்கும். வான் மறை வள்ளுவன் வழி மொழிந்த சொற்கள் நமக்கு வளம் சேர்க்கும். நன்றி மௌளி. தனி மடல் பார்க்கிறேன்.
எளிதாய், குறளைப் போலவே விளக்கமும் சுருக்கமாய் நன்றாய் எழுதியிருக்கிறீர்கள் மேடம். தொடர்ந்து எழுதுங்கள். சேர்த்து வைத்துக் கொள்ள நல்ல பதிவு.
சதங்காவுடைய (வலைப்)பூவில இருந்து வாசனை பிடிச்சு இந்தப்பக்கம் வந்தேன் :) நல்லா இருக்குங்க, அம்மா. திருக்குறளையும் சேர்த்துப் போட்டால் பொருள் இன்னும் சுவைக்குமோன்னு தோணுச்சு.
சதங்கா, குறள் போல் சுருக்கமாய் எழுத வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அதைத்தான் இங்கே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.
நன்றி சதங்கா
கவிநயா, நல்ல பெயர் - குறளையும் இணைத்துப் போட எண்ணியுள்ளேன். இன்னும் இரு அதிகாரங்களுக்குள் அனைத்திற்கும் இணைக்க முயல்கிறேன். கருத்துக்கு நன்றி
Post a Comment