வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து...................................... 01
இல்லாதார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதே ஈகை. அவ்வாறின்றிக் கொடுப்பதெல்லாம் ஒரு பயனை எதிர் பார்த்துச் செய்வதே ஆகும்.
==================================================
நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.......................................... 02
நல்வழி என்றாலும் பிறரிடமிருந்து ஒன்றைக் கொள்வது தீமையே ஆகும். மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்கு ஒன்றைக் கொடுத்து உதவுவதே நன்மையாகும்.
==================================================
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள .................................... 03
இரப்பார்க்கு இல்லை என்று சொல்லாமல் ஒரு பொருளைக் கொடுத்தல் உயர்குடிப் பிறந்தாரின் பண்பாகும்.
==================================================
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு............................................. 04
உதவி கேட்பவன் பெற்று மகிழும் இன்முகத்தைக் காணாது அவனுக்கு இல்லை என்று மொழிவது கையேந்திப் பிச்சை எடுப்பதை விடக் கொடியது.
==================================================
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்........................................... 05
தன்பசியை அடக்கிக் கொள்வது சிறந்த ஆற்றல் தான். ஆனாலும் பிறரின் பசித்துன்பத்தைப் போக்க உணவிட்டு உதவுபவனின் ஆற்றல் அதனை விட உயர்ந்தது.
==================================================
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி....................................... 06
இல்லாதவனின் பசித் துன்பத்தைப் போக்குவது தான் பொருள் பெற்ற ஒருவன் தன் பொருட்செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் முறையாகும்.
==================================================
பாத்தூண் மறீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது................................................. 07
இருப்பதைப் பகுத்துப் பிறருக்குக் கொடுத்து உண்பவனை பசியென்னும் கொடிய துன்பம் சேர்வதில்லை.
==================================================
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண வர்......................................... 08
பொருளைச் சேர்த்து வைத்துப் பிறருக்குக் கொடுத்து மகிழாதவர்கள் இருந்தும் இல்லாதவர்களே !
==================================================
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்..................................................... 09
இல்லாமையால் தவிப்பதை விடக் கொடுமையானது தானே தனித்திருந்து உண்பதாகும். கொடுப்பது மகிழ்ச்சி; மறைப்பது துன்பம்.
=======================================================
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.................................................. 10
இறப்பை விடக் கொடியது இவ்வுலகில் வேறொன்றுமில்லை. ஆனால் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்க முடியாத போது, ஈயாமல் இருப்பதை விட, இறப்பதே மேலாகும். மேலும் அக்கொடிய இறப்பும் கூட இனிதாவதுண்டு.
==================================================
செல்வி ஷங்கர்
==================================================
Sunday, January 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
கொடுத்துப் பாருங்களேன் !
சுவைத்து மகிழக்லாம் !!
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Tamil typing is difficult for me. Came across your site just now.
Will be good if we can add English translation for the meaning as well. Will be useful few more folks.
Let me know if you need help with that.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Itsdifferent
அன்பு செல்விஷங்கர் இங்கே பாருங்கள். உங்களுக்கு பட்டாம் பூச்சி பதிவர் விருது:)
http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html
அன்பு செல்விஷங்கர் இங்கே பாருங்கள். உங்களுக்கு பட்டாம் பூச்சி பதிவர் விருது:)
http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html
Post a Comment