01 : அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
ஒருவன் நற்செயலைச் செய்யாமல் தீய வழியில் நடப்பவனே ஆனாலும் பிறரைப் பற்றிப் புறங்கூறாமலிருத்தல் அவனுக்கு மேன்மையைத் தரும்.
02 : அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
அறத்தை அழித்து அறமல்லாத பாவச் செயலைச் செய்வதை விடக் கொடுமையானது காணும் போது சிரித்துப் பேசி காணாத போது பழித்துப் பேசுதல்
03 : புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்
புறங்கூறிப் பொய்யாக உயிர் வாழ்தலை விட இறத்தல் ஒருவனுக்கு அற நூல்கள் கூறும் நல்வழிப்பயனை எல்லாம் தரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழ்தல் வாழ்வே ஆகாது.
04 : கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
நேருக்கு நேர் நின்று மனம் புண்படும்படி பேசினாலும் பேசலாம். ஆனால் அவன் இல்லாத இடத்து அவனைப் பற்றி மாறான சொற்களைப் பேசாதே !
05 : அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்
நல்வழிச் செல்லும் அன்பு உள்ளம் இல்லாதவன் என்பது அவன் கூறும் புறஞ்சொல்லின் புன்மையால் தெரிந்து விடும். ( புன்மை = இழிவு)
06 : பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்
பிறரைப் பழி கூறுபவன் தானும் அத்தகைய பழிச் சொல்லுக்கு ஆளாவான். இழித்தும் பழித்தும் பேசுபவன் பாராட்டப் படுதல் இல்லை.
07 : பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
சிரித்துப் பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவர்கள் நட்புக் கூடப் பிரியும் படியான கொடுஞ்சொற்களைப் பேசிப் பிரித்து விடுவர்.
08 : துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னெகொல் ஏதிலார் மாட்டு ?
தம்மோடு நெருங்கிப் பழகுபவரையே தூற்றிப்பேசும் இயல்புடையார் முன்பின் அறியாதாரை என்ன பாடு படுத்துவர் ? இழித்தும் பழித்தும் பேசுதல் எவர்க்கும் ஏற்றதன்று. பேச்சில் கூட அன்பு பாராட்டத் தெரியாதவர்கள் செயலில் என்செய்வர் !
09 : அறன்நோக்கி ஆற்றுக்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை
கண்டொன்று சொல்லி காணாதொன்று பேசுபவனையும் அறம் கூறும் இவ்வுலகம் தாங்கிக் கொள்கிறது. பொறுத்தல் தன்னியல்பு என்பதால் இவ்விழிந்தவனையும் உலகு தாங்குகிறது
10 : ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
பிறர் குற்றங்களைக் கண்டு உணர்வது போல் நம் குற்றங்களையும் நாம் கண்டால் இவ்வுலகில் நமக்குத் துன்பம் என்பதே இல்லை. தன்னைப்போல் பிறரையும் எண்ண வேண்டும். அடுத்தவனிடமும் அன்பு காட்ட வேண்டும்.
செல்வி ஷங்கர் - 04082008
Monday, August 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
புறங்கூறாதீர் !!
அறங்கூறுங்கள் !!!!
Post a Comment