01 : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் ஒருவன் நல்வாழ்விற்கு வழிகாட்டி அவனை தேவரிடத்து அழைத்துச் செல்லும். அடங்காமை தீவழிச் செலுத்தி அவ்னை நரகத்தில் தள்ளிவிடும்.
02 : காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு
அடக்கமே இவ்வுயிர்க்குச் சிறந்த செல்வம். அதை விடப்பெரிய செல்வம் வேறில்லை. அதனால் நாம் காக்க வேண்டிய பொருள்களுள் அடக்கத்தை ஒன்றாகக் கொண்டு காக்க வேண்டும். உயிரையும் உடலையும் விட்டு விடுவோமா எளிதில் ? அது போல் அடக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
03 : செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
அறியவேண்டியவற்றை அறிந்து அடங்கி நடந்தால் அவ்வடக்கமே அவனுக்குப் புகழைத் தரும்.
04 : நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
இல்வாழ்க்கை நெறியில் சென்று அடக்கத்தை மேற்கொள்பவன் பெருமை மலையைக் காட்டிலும் பெரியது. மனிதன் மலை போல் தோற்றம் பெறுதல் மலைப்பான் செயலல்லவா !
05 : எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பணிவுடைமை என்பது எல்லார்க்கும் நன்மையைத் தரும். அதிலும் செல்வர்கள் பணிந்து நடந்தால் அது அவர்கள் மேலும் ஒரு செல்வத்தைப் பெற்ற சிறப்பைத் தரும். அடக்கமே பெருஞ்செல்வம்.
06 : ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
ஆமை தன்னைத் துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள தன் ஓட்டினுள் ஐந்து உறுப்புகளையும் அடக்கிக் கொள்வது போல் ஒருவன் ஒரு பிறப்பில் தன் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டால் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறப்பிலும் துணை நிற்கும். ஒன்று எழானால் உயர்வல்லவா ! உவப்பல்லவா !
07 : யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
எவற்றைக் காக்காவிட்டாலும் சரி ஒருவன் தன்னுடைய நாவை மட்டுமாவது அடக்கி ஆள வேண்டும். இல்லையெனில் அவன் சொல் குற்றத்தால் துன்பப்படுவான். கல்லால் அடித்த அடியை விட வலியுடையது சொல்லால் அடித்த அடி !
08 : ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
நாவடக்கமின்றி தீச்சொற்களைப் பேசித் திரிபவனிடம் எந்த நன்மையும் பயன் தராது. ஒரு தீமை பல நன்மைகளை பயனற்று விடச் செய்யும். ஒன்று பலவற்றை அழிக்குமென்றால் அந்த ஒன்றை நாம் அடக்க வேண்டாமா ?
09 : தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
ஒருவனைத் தீயினால் சுட்ட புண் மருந்திட்டால் ஆறிவிடும். ஆனால் தீய சொற்களால் மனம் புண்படும் படி பேசிய சொற்கள் ஏற்படுத்தும் மனக்காயம் மருந்திட்டாலும் ஆறாது. வடுவை ஏறபடுத்தி விடும். புண்ணே கொடிது ! வடு அதனினும் கொடியது !
10 : கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
மனத்தே பொங்கி எழும் சினத்தை அடக்கி, கற்று அடங்கியவன் இருக்குமிடத்தைத் தேடி, அறக்கடவுள் தானே செல்வான். கற்றலின் பயன் அடங்கலே ! அதை அறிந்தவன் சினத்தை அடக்கி சொற்களை ஆளுதல் எளிது. அப்படிப்பட்ட சொற்களைக் கேட்க அறமே வழி கேட்டுச் செல்லும். அறம் நம் முன்னே வருமென்றால் நாம் அதை வரவேற்க வேண்டாமா ! அடக்கத்துடன்!
செல்விஷங்கர் - 26082008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வள்ளுவம் எப்படிச் செல்கிறது நண்பர்களே ?
// நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
//
//எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
//
ஹை...என் மனப்பாடப் பகுதி!.இப்பக் குறளும் சேர்த்துப் படிக்கும் பொழுது, இன்னும் சுவை கூடுது செல்வி அம்மா.
மிக்க மகிழ்ச்சி. தங்கள் எழுத்து, 'வளர்வதன் பாத்தியுள் நீர் பெய்தற்று'ப் போன்றது.பயனடைவோர் இன்னும் வருவர் அம்மா! வாழ்த்துகள்.
நிலையின் திரியாது அடங்கியான்.....
இல்வாழ்க்கை நெறியில் சென்று, அடக்கத்தை மேற்கொள்பவன் பெருமை ,மலையைக் காட்டிலும் பெரியது. மனிதன் மலை போல் தோற்றம் பெறுதல் மலைப்பான செயலல்லவா !
இரண்டு அரைப் புள்ளி போட்ட பின் தான் எனக்குத் தெளிவானது....:D :D
//ஒன்று பலவற்றை அழிக்குமென்றால் அந்த ஒன்றை நாம் அடக்க வேண்டாமா? //
பல நன்மைகளை பயனற்று செய்யும், அந்த ஒன்றை அடக்குதல், எளிய வழியே! - பின்பற்ற முயல்வோம்!
-- நாடிக்கண்ணா.
புது வண்டே !! நாடிக்கண்ணா !!
அடக்கம் என்பது நமக்குப் பெருமை தான். எண்ணம் சொல் செயல் அடங்குதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த ஒன்றைச் செய்ய முயன்றால் நாம் தான் உலகில் பெரியவர்கள். டிவிங்கிளாக இருந்தாலும்.
நல்வாழ்த்துகள்
அம்மா,
மிக நல்ல பதிவு.
"செய்தவம் ஈண்டு முயலப்படும்" என்று முடிகிற குறளை வைத்து ஒரு சின்ன, மிகச் சின்னதாயினும் பரவாயில்லை. போட முடியுமா?
இது உங்களின் இந்தப் பிள்ளைக்காக.
அந்தோணி முத்து
ஒரு சிறு பதிவு போட்டுடுவோம் - சற்றே பொறுத்துக் கொள்க
அந்தோணி முத்து
உனது வேண்டுகோளை ஏற்று ஒரு சிறு பதிவு போடப்பட்டிருக்கிறது. படித்துப்பார்.
http://pattarivumpaadamum.blogspot.com/2008/07/blog-post.html
நல்வாழ்த்துகள்
வழக்கம் போல அருமையான ரத்தினச் சுருக்கம்:)
ரசிகன் - வள்ளுவமே இரண்டடிச் சுருக்கம் தானே !
Post a Comment