Wednesday, July 16, 2008

16 : பொறையுடைமை

01 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை

தன்னைத் தோண்டுபவனையும் விழாமல் தாங்கி நிற்கும் நிலம் போல் நாம் நம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

02 : பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின் நன்று

நாம் பிறர் செய்த தீங்கினைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். முடிந்தால் அதனை மறந்து விடுதல் அதனினும் நன்று.

03 : இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை

வறுமையில் மிகப் பெரிய வறுமை நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை நாம் வரவேற்காமல் இருப்பதே. அதைப் போல் வலிமையில் மிகப் பெரிய வலிமை, அறியாமல் நம்மை இகழ்ந்து பேசுபவரை நாம் பொறுத்துக் கொள்வதே !

04 : நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

நற் பண்புகள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால் நாம் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வதே உயர் பண்பு.

05 : ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து

ஒருவர் செய்த தீங்கைப் பொறுக்காது தண்டித்தவரை இந்த உலகம் ஒரு பொருட்டாகக் கருதாது. ஆனால் அச்செயலைப் பொறுத்துக் கொண்டவரை பொன்னைப் போற்றிப் புகழ்வது போல் போற்றி மகிழும்.

06 : ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம். ஆனால் அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு இந்த உலகம் உள்ளவரை புகழ்.

07 : திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

தகாத செயலை நமக்குப் பிறர் செய்யினும் அதற்காக நாம் மனம் வருந்தி அவர்க்கு நன்மை தராத செயலைச் செய்யாதிருத்தல் நன்று. தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.

08 : மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்

மிகுந்த சீற்றம் கொண்டு கொடிய தீச்செயலை நமக்குச் செய்தவரை நாம் நம்முடைய பொறுமை என்னும் தகுதியால் வென்று விடல் வேண்டும்.

09 : துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்பவர்கள் ஆசைகளைத் துறந்த துறவியரைக் காட்டிலும் மேலானவர்கள் ஆவர்.

10 : உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உண்ணா நோன்பினை மேற்கொள்ளும் பெரியவர்களும் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களின் பின் வைத்தே எண்ணப் படுவர். பொறுமை என்பது துறவினும் மேலானது.

செல்வி ஷங்கர் - 16072008

3 comments:

')) said...

குறளமுதம் பருக வருக

')) said...

இந்த முயர்சி ரெம்ப நல்ல்ல இருக்குது. முதல்ல யுனிகோட் தேடலில் இதுபோல எளிதில் படிக்கக் கிடைக்கும் குறள் விளக்கங்கள் குறைவுதான். விக்கிப்பீடியாவில் கிடைக்குது, இருப்பினும் ஒன்றுக்கு இன்னொன்று இருப்பது நல்லதுதான்.

குறிச்சொற்களை கீழ்கண்டவாறு பயன்படுத்தி, வலப்பக்கம் தெரியுமாறு வச்சா இன்னும் சிரப்பாயிருக்கும்.

பால், அதிகாரம் பெயர், அதிகாரம் எண், குறிச்சொற்கள்

இந்தப் பதிவுக்கு

அறம், பொறையுடமை, 16, பொறுமை, நிதானம், அடக்கம்

இந்த மாதிரி குடுக்கலாம்

அதிகாரத்தையும் எண்ணையும் சேர்த்து
பொறையுடைமை(16) எனவும் தரலாம்.

வலப்பக்கம் குறிச்சொற்கள் வருவது அவசியம் என நினைக்கிறேன்.

')) said...

சிறில் அலெக்ஸ்,

குறளுக்கு எத்தனையோ விளக்க உரைகள் உள்ளன. நம்முடையதெல்லாம் மிகச் சாதாரணமான முயற்சியே ! எளிமையாய் பொருள் விளக்கம் வேண்டும் என்பது நோக்கம்.

வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி சிறில் அலெக்ஸ் - அடிக்கடி வருக - கருத்துகள் தருக - ஆலோசனைகள் வழங்குக - நன்றி

ஆலோசனை செயல் படுத்தப் படும்.