Sunday, April 6, 2008

சாய்தளம்

ஓடி வந்த காவியா நின்று பார்த்தாள். பூங்காவின் நாற்புறமும் குழந்தைகள். அவளும் கைப்பொருளை வீசி விட்டு, தலையை அசைத்த படி ஊஞ்சலின் அருகே சென்றாள். அங்கே இடமில்லை. அவளின் குட்டிக் கைப்பை புல் வெளியில் கிடந்தது. ஏமாற்றமாய் இருந்தது.

சாய்தளத்தின் ( சீசா ) அருகில் வந்தாள். ஒரு புறம் ஏறி அமர்ந்தாள். அதன் மறு புறம் உயர்ந்தே நின்றது. ஆடுவதற்கு யாருமில்லை. வாடிய கண்களோடு அங்குமிங்கும் பார்த்தாள்.

சறுக்கு மரத்தில் எல்லாக்குழந்தைகளும் வரிசை வரிசையாய் ஏறி இறங்கி சறுக்கிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இட நெருக்கடி. இங்கோ இருவர் விளையாடும் சாய்தளம் இறங்கியே கிடந்தது. ஏனோ ஏக்கமாய்ப் பார்த்தாள் அதனை! மேலும் கீழுமாய் ஏறி இறங்கும் சாய்தளத்தில் தான் ஒருத்தியாய் அமர்ந்து கொண்டு என் செய்வது ?

காவியாவை அழைத்து வந்த பாட்டி அங்கே பூங்காவின் கல்மேடையில் அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் காவியாவை நோக்கின.மெதுவாய் எழுந்து நடந்து வந்து சாய்தளத்தின் மறு புறத்தை தன் கைகளால் அமர்த்தி விட்டாள். காவியா மேலே பறந்தாள்! கண்களெல்லாம் சிரிப்பு! அவளும் பாட்டியும் பூங்காவில் சாய்தளமாடி தங்களை மறந்தனர்.

ஆனாலும் அவள் மனம் ஊஞ்சலையும் சறுக்கு மரத்தையுமே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. மூன்று வயதுக் காவியாவிற்கு ஒன்றும் புரிய வில்லை! பூங்காவைச் சுற்றி ஓடின குழந்தைகள். ஆடும் ஊஞ்சலிலோ அணிவரிசைக் காத்திருப்பு. சறுக்குமரத்திலோ தள்ளி அடித்து ஓடும் கூட்ட நெரிசல். சாய்தளத்தில் ஏன் ஒருவரையும் காணோம்? இருவர் இருந்தாலே இன்பமாய் ஆடலாமே! ஒன்றும் புரியாமல் ஓடினாள் பாட்டியிடம். ஆடிக்கொண்டே! பூங்கா அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது ! ஏன் ?
-------------------------------------------------------------------------------------------