Thursday, January 24, 2008

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் ........அறம்

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் !
---அறம்---
............................................................

நாடாக இருந்தால் என்ன ?
காடாக இருந்தால் என்ன ?
எங்கே நல்லவர்கள் இருக்கிறார்களோ
அங்கே நிலமும் நன்றாக இருக்கும் !
நிலம் கெடுவது மக்களால் தான் !
மேடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும்
நிலத்தின் இயல்பு கெடுவதில்லை.
அதன் மீது நடமாடுகின்ற மக்களே
மண்ணைக் கெடுக்கின்றார்கள்.

எல்லார்க்கும் நம்மால் இயன்ற நல்லவற்றைச் செய்தால் நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்? செய்கின்றோம் என்ற பெருமித உணர்வே நமக்கு மேன்மையைத் தருமே! எல்லாரும் எல்லார்க்கும் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. ஒரு சிலரால் தான் அது முடியும்.
இதை உணராத நாம் செய்பவரையும் குறை கூறுகிறோம்.

விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விட மாட்டோம். பழிக்குப் பழி
வாங்கினால் நிகராகத்தான் இருப்போம். மன்னித்தால் உயர்வடைவோம். செயல் ஒன்றுதான்! அதன் முயற்சியும் ஒன்று தான்! நம் மனந்தான் அதை ஏற்க மறுக்கின்றது. மிகச் சிறந்த அறம் நம்மாலியன்ற நல்லவற்றை நாம் செய்வது தான். இல்லாவிட்டால் தீமையாவது செய்யாமலிருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் தீமை நன்மையைத் தராது. தீமையை நன்மையால் வெல்லுவது தான் சிறப்பு. மனமும் நம் சுற்றுப்புறமும் கெடாமலிருக்க வேண்டுமென்றால் நாம் நல்ல சிந்தனை உடையவராக இருப்போம். அதுவே நம்மை உயர்த்தும்.

7 comments:

')) said...

சோதனை மறுமொழி

')) said...

அவ்வையாரின் அந்த அருமையான

"நாடா கொன்றோ; காடா கொன்றோ" பாடலையும் எடுத்துப் போட்டிருக்கலாமே?

')) said...

நல்லா சொன்னீங்க அம்மா. இந்த இடுகையைப் படிச்சவுடனே நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது நினைவுக்கு வந்துருச்சு.

http://koodal1.blogspot.com/2005/11/58.html

')) said...

வருகைக்கு நன்றி ஜீவி
அக்கருத்தினைத் தான் உரையில் தொடங்கி இருக்கிறேனே - இருப்பினும் அப்பாடலைத் தருகிறேன்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே !

-- அவ்வை

')) said...

நன்றி குமரன், தங்களின் பதிவு படித்தேன். அடுத்தவர்க்கு ஒரு நன்மை செய்வது என்பது நமக்கு யாரும் தர முடியாத ஒரு அமைதி. அதுதான் இதன் அடிப்படை.

')) said...

//
நம் சுற்றுப்புறமும் கெடாமலிருக்க வேண்டுமென்றால் நாம் நல்ல சிந்தனை உடையவராக இருப்போம். அதுவே நம்மை உயர்த்தும்.
//
கரெக்டா சொன்னீங்க!
எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்.

அதைத்தான் நானும் சொல்றேன் நாமெல்லாரும் உயரணும்னா 'திங்க் பிக்' அப்படின்னு.

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா
சரியாகச் சொன்னாய் சிவா - திங்க் பிக் கிற்கு நல்வாழ்த்துகள்